Published : 17 Aug 2024 05:19 PM
Last Updated : 17 Aug 2024 05:19 PM

‘மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை’ - போராட்டங்களை கைவிட கோரும் மத்திய அரசு

புதுடெல்லி: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவர்கள் போராட்டங்களை கைவிட்டு கடமைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொல்கத்தாவின் ஆர்.ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மற்றும் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், புதுடெல்லியில் உள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்தனர்.

பணியிடத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து சங்கங்கள் தங்கள் கவலைகளை முன்வைத்துள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு உறுதியளித்துள்ளது.

அரசு நிலைமையை நன்கு அறிந்துள்ளது என்றும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. 26 மாநிலங்கள் ஏற்கெனவே தங்கள் மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. சங்கங்கள் வெளிப்படுத்திய கவலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைப்பதாக அமைச்சகம் அவர்களுக்கு உறுதியளித்தது.

மாநில அரசுகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். பொது நலன் கருதியும், டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் கடமைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேர வேலை நிறுத்தம்: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், "கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலையிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவோம். அவரது தலையீட்டைக் கோருவோம்.

பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி தனது கவலையை வெளிப்படுத்தினார். நிச்சயமாக, இது அவர் அக்கறையுள்ளவர் என்பதைக் காட்டும் ஓர் அம்சமாகும். எனவே, பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும். ஐஎம்ஏ பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். இனி அரசுதான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் கேட்பது அவர்களால் முடியாத ஒன்றல்ல. மிகவும் அடிப்படையான உரிமையான வாழ்வதற்கான உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

மருத்துவர்களின் போராட்டத்துக்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக மருத்துவர்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள். நாங்கள் அவசர சேவைகளை கவனித்து வருகிறோம். அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களுக்காக நிற்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் இது சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x