Published : 17 Aug 2024 04:25 PM
Last Updated : 17 Aug 2024 04:25 PM
புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் ‘பிரதமரின் தலையீட்டுக்கான நேரம் வந்துவிட்டது’ என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், "கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலையிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவோம். அவரது தலையீட்டைக் கோருவோம்.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி தனது கவலையை வெளிப்படுத்தினார். நிச்சயமாக, இது அவர் அக்கறையுள்ளவர் என்பதைக் காட்டும் ஓர் அம்சமாகும். எனவே, பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும். ஐஎம்ஏ பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். இனி அரசுதான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் கேட்பது அவர்களால் முடியாத ஒன்றல்ல. மிகவும் அடிப்படையான உரிமையான வாழ்வதற்கான உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம்.
மருத்துவர்களின் போராட்டத்துக்கு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக மருத்துவர்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள். நாங்கள் அவசர சேவைகளை கவனித்து வருகிறோம். அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களுக்காக நிற்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை என்பதால் இது சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்தார்.
ஐஎம்ஏவின் 5 கோரிக்கைகள் என்ன? - 1. உறைவிட மருத்துவர்களின் (ரெசிடென்ட் டாக்டர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை. 2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்ஜி கர் மருத்துவமனையை சூறையாடியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். 4. விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு கட்டாய பாதுகாப்புக்கான உரிமை உண்டு. 5. குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT