Published : 17 Aug 2024 02:19 PM
Last Updated : 17 Aug 2024 02:19 PM

தெற்கு நாடுகளில் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாத அச்சுறுத்தல்கள்: மோடி கவலை

புதுடெல்லி: பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்று உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பு, இந்தியாவின் ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவால் இணையவழியில் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி தனது தொடக்க உரையின்போது, ​​​​“உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளமாக மாறியுள்ளது. சுற்றிலும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரத்தில் இன்று நாம் சந்திக்கிறோம். கோவிட் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. மறுபுறம், போர் சூழ்நிலை நமது வளர்ச்சிப் பயணத்திற்கு சவால்களை உருவாக்கியுள்ளது.

பருவநிலை மாற்றத்தின் சவால்களை மட்டும் நாம் தற்போது எதிர்கொள்ளவில்லை. சுகாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். பொருளாதார சவால்கள், சமூகம் எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் சார்ந்த சவால்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை உலகளாவிய தெற்கில் உள்ள சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன. ஒற்றுமையில் பலம் உள்ளது. இது உலகளாவிய தெற்கு நாடுகள் புதிய திசையை நோக்கி செல்ல உதவும்.

உலகளாவிய நிர்வாகத்தை கையாள்வதற்காக முந்தைய நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களால், தற்போதைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை சர்வதேச தெற்குடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார். இந்த உச்சிமாநாட்டில் வங்கதேசம், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x