Published : 17 Aug 2024 03:55 AM
Last Updated : 17 Aug 2024 03:55 AM

காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு: செப். 18-ல் தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டமாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 மாநிலங்களிலும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 2024 மக்களவை தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது. பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். இத்தேர்தலில் பல வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், மிகஅதிகபட்சமாக 58.58 சதவீத வாக்குகள் பதிவாகின. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கணிசமான வாக்குகள் பதிவாகின. இதுதான் ஜனநாயகத்தின் வலிமை.காஷ்மீர் மக்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பதிலாக தேர்தல் நடைமுறையை தேர்வு செய்துள்ளனர். காஷ்மீர் மக்கள்சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருப்பதை, சமீபத்தில் அங்கு சென்றபோது அறிய முடிந்தது.

ஜம்மு காஷ்மீரில் 7 எஸ்சி தொகுதிகள், 9 எஸ்டி தொகுதிகள், 74 பொது தொகுதிகள் என மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அங்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. காஷ்மீரில் 87.09 லட்சம் பேர்வாக்குரிமை பெற்றுள்ளனர். 11,838வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மிதக்கும் வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்படும்.

ஹரியானாவில் ஒரேகட்டமாக.. ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். மாநிலத்தில் 2.01 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 26-ம் தேதிமுடிவடைகிறது. அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “கடந்த முறை மகாராஷ்டிரா, ஹரியானாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. சமீபகாலமாக மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்துவருகிறது. வரும் வாரங்களில் அங்குபல்வேறு பண்டிகைகளும் கொண்டாடப்பட உள்ளன. இதன்காரணமாகவே மகாராஷ்டிர தேர்தல் அட்டவணை தற்போது வெளியிடப்படவில்லை” என்றார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2025 ஜனவரி 4-ம்தேதி முடிவடைய உள்ளது. எனவே,மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2025 பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைகிறது. அங்கு ஜனவரியில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக இணைந்து அங்கு கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த 2018-ல் கூட்டணி உடைந்து, ஆட்சி கவிழ்ந்தது. இதன்பிறகு அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2019 ஆகஸ்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது. சிறப்பு அந்தஸ்துநீக்கப்பட்ட பிறகு, அங்கு முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

வயநாடு இடைத்தேர்தல் எப்போது? - கடந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இதில் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறும்போது, “காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, வயநாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே, அந்த தொகுதி இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பிய பிறகு இடைத்தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x