Last Updated : 15 May, 2018 08:08 AM

 

Published : 15 May 2018 08:08 AM
Last Updated : 15 May 2018 08:08 AM

பாஜகவின் இரும்பு மனிதர்கள்... பல்லாரி சகோதரர்கள்

த்தனையோ தேர்தலைப் பார்த்துவிட்டேன். ஆனால் கர்நாடகா தேர்தலைப் போல பார்த்ததே இல்லை. பெரிய அளவில் போஸ்டர் இல்லை, பேனர்கள் இல்லை. கட்அவுட், ஹோர்டிங்ஸ் எதுவுமே இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏறக்குறைய 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து, பல்லாரி வரும் வரை அப்படித்தான் இருந்தது. ஆனால் பல்லாரியில் நுழைந்ததும் நிலைமை தலைகீழ்.

குறுகிய தார் ரோடு மொலக்கலமுரு கிராமத்துக்குப் போகிறது. அங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்போடு செயல்படும் போலீஸ் செக்போஸ்ட்டில் வெளியேறும் வாகனங்களை விடவும் உள்ளே செல்லும் கார்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. அங்கிருந்து சில நூறு மீட்டர்களுக்கு அப்பால், காய்ந்து கிடக்கும் பூமி, பாலைவனமாக மாறுகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கட்அவுட் மயம். பாஜக தலைவர் அமித்ஷா. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, தாடிக்கார ராமுலு கட்அவுட்கள் பிரமாண்டமாக நிற்கின்றன. இந்தப் பகுதியின் முக்கிய பிரபலங்களான 2 சகோதரர்கள் தேர்தலில் நிற்கின்றனர்.

பல்லாரி ஏரியாவின் ராஜாவும் கிங் மேக்கருமான கலி ஜனார்த்தன் ரெட்டி மீது இந்தியாவின் எந்த அரசியல்வாதியை விடவும் அதிக வழக்குகள் உள்ளன. ஆனால் அவரைத்தான் நம்பியிருக்கிறது பாஜக. மொத்தம் 23 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அவர் கையில். இது மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 10 சதவீதம். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதால், அரசியல் குற்றம் மற்றும் ஊழலுக்கு ஆதரவாக ஏகப்பட்ட சமரசங்களை செய்து கொண்டுள்ளது பாஜக.

ரெட்டி சகோதரர்களில் இளையவர் ஜனார்த்தன். கருணாகர ரெட்டியும் சோமசேகர ரெட்டியும் அண்ணன்கள். கடந்தமுறை எடியூரப்பா அமைச்சரவையில் ஜனார்த்தன் ரெட்டியும் கருணாகர ரெட்டியும் முக்கிய இலாகாக்களைக் கொண்ட அமைச்சர்கள். சோமசேகர ரெட்டிக்கு ஏகப்பட்ட பணப்புழக்கம் கொண்ட கர்நாடக பால் கூட்டுறவு சம்மேளனத் தலைவர். இவர்கள் அனைவருமே வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்தார்கள். ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர் பல்லாரிக்குள் வரக் கூடாது என்பது நிபந்தனை. அதனால்தான் அவர் மொலக்கலமுரு கிராமத்தில் தங்கிப் பிரச்சாரம் செய்கிறார். அவரைக் கண்காணிக்கத்தான் செக்போஸ்ட்.

பல்லாரியின் சத்னாம்பேட்டில் சோமசேகர ரெட்டியை சந்தித்தோம். அவர் மீதும் அவருடைய சகோதரர் மீதும் சட்டவிரோத சுரங்க வழக்குகள் இருப்பது குறித்து கேட்டோம். “அதெல்லாம் காங்கிரஸ் மற்றும் எதிரிகள் செய்த சதி..” என மறுத்தார். சுரங்கப் பணிகளை நிறுத்தி மறு ஏலம் விடச் செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்தார். “10 லட்சம் பேர் வேலை இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள்..” என்றார். கிரிமினல் வழக்குகள் குறித்து கேட்டபோது, “தங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்” என்றார்.

பல்லாரி ராஜ்ஜியத்தில் எங்கு பார்த்தாலும் இரும்புத் தாது குன்றுகள்தான். ஆங்காங்கே மாங்கனீஸ் தாது குன்றுகளும் இருக்கின்றன. நீதிமன்றத் தடைக்கு முன்பு, யார் வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு தாதுவை வெட்டி எடுத்து விற்பனை செய்தார்கள். இங்கு ஆந்திர அரசும் கிடையாது, கர்நாடக அரசும் கிடையாது. ஜனார்த்தன் ரெட்டி சொல்வதுதான் சட்டம். ஆந்திராவில் இருந்த ரெட்டியின் ஓபுலாபுரம் சுரங்கத்தில் தாது இருப்பு கம்மிதான். ஆனால் மாமூல் வசூலில் கொடி கட்டிப் பறந்தார்கள் ரெட்டி சகோதரர்கள். தினசரி வசூல் ரூ.100 கோடியைத் தாண்டுமாம்.

ரெட்டி சகோதரர்கள் ஆந்திராவின் எல்லையைத் தாண்டி கர்நாடகாவில் 5 கி.மீ வரைக்கும் சுரங்கம் தோண்டி சம்பாதித்தார்கள். சந்தோஷ் ஹெக்டே அறிக்கையில், கடந்த 2006 முதல் 2010 வரை ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி மதிப்புக்கு சட்ட விரோதமாக இரும்புத் தாது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 650 அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது லோக்ஆயுக்தா. இதில் 53 பேரை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டது. உடனே ரெட்டி, எடியூரப்பாவுக்கு எதிராகக் களத்தில் இறங்கினார். தனது ஆதரவு எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்கவைத்து, எடியூரப்பாவுக்கு எதிராகப் பேசவைத்து அந்த வீடியோக்களை வெளியிட்டார். பாஜக சமாதானத்துக்கு இறங்கிவந்தது. மாற்றப்பட்ட அத்தனை அதிகாரிகளும் திரும்பவும் இங்கேயே டிரான்ஸ்பர் ஆகி வந்தார்கள். ரெட்டிகள் மீண்டும் அமைச்சர்களானார்கள். எடியூரப்பாவுக்கு நெருக்கமாக இருந்த ஷோபா ராஜினாமா செய்தார்.

கையில் குவிந்த பணத்தால் குற்றங்கள் அதிகரித்தது. வாழ்க்கை முறை மாறியது. பல்லாரிகள் திடீரென சொகுசுக் கார்களில் வலம் வந்தார்கள். சொந்தமாக விமானம், ஹெலிகாப்டர்கள் வாங்கினார்கள். இப்போது எல்லாம் போய்விட்டது. காங்கிரஸ் வேட்பாளர் அனில் லாட் தனது 2 ஹெலிகாப்டர்களையும் விற்றுவிட்டார்.இப்போது ஜனார்த்தன் மட்டும் 2 ஹெலிகாப்டர் வைத்திருக்கிறார். மற்றவர்கள் விற்று விட்டார்கள்.

பல்லாரியில் போட்டியிடும் 3 வேட்பாளர்களுமே முன்னாள் சுரங்க உரிமையாளர்கள்தான். மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் 3 சுரங்கங்களில் இரண்டை இழந்துவிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் அத்தனை சுரங்கங்களையும் இழந்துவிட்டார். பாஜக வேட்பாளரிடமும் எந்த சுரங்கமும் இல்லை. இவருக்கு மாமூல் கொடுத்து வந்த சுரங்க உரிமையாளர்கள் எல்லோருமே சுரங்கங்களை இழந்து விட்டார்கள். தேர்தல் முடிவால் மீண்டும் “நல்ல காலம்” பிறக்கும் என எல்லோருமே நம்புகிறார்கள். இரும்புத் தாதுவின் விலையும் சர்வதேசச் சந்தையில் மீண்டும் ஏற ஆரம்பித்திருக்கிறது.

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x