Published : 03 May 2018 12:30 PM
Last Updated : 03 May 2018 12:30 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் இழுத்தடிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் இருப்பதால் கையெழுத்து வாங்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு 6 வது வார முடிவில் ‘ஸ்கீம’் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்தது.
தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு முழுமையான வரைவுதிட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதுபற்றி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை காவிரி மேலாண்மை விவகாரம் சம்பந்தமாக தமிழக் முதல்வரையோ, அனைத்துக்கட்சித் தலைவர்களையோ சந்திக்க மறுத்து வருகிறார். மத்திய அமைச்சர்களும் காவிரி வழக்கில் எதிரான கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. மாறாக தாக்கல்செய்யாதது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வினோதமான விளக்கத்தை அளித்தார்.
அவரது விளக்கத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை, அவர்கள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வந்தபின் தான் கையெழுத்து பெற்று தாக்கல் செய்ய முடியும். ஆகவே கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை நடைமுறைபடுத்துவதில் இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முழு அறிக்கையாக மத்திய அரசு, 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி -16-ம் தேதி உத்தரவு அடிப்படையில், ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது. வழக்கு 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT