Published : 16 Aug 2024 02:13 PM
Last Updated : 16 Aug 2024 02:13 PM

மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்கு பதிவு: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

புதுடெல்லி: மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மருத்துவமனையின் தலைவருக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

முதலில் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சிபிஐ நடவடிக்கை: இதன் ஒரு பகுதியாக, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரான சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆக. 16) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மருத்துவமனை மீது தாக்குதல்: பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து புதன் இரவு (ஆக. 14) கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அந்த கும்பல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் தடையங்களை அழிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்திருப்பதாக கொல்கத்தா போலீஸார் இன்று (ஆக. 16) தெரிவித்தனர்.

நீதிமன்றம் கண்டிப்பு: மருத்துவமனை தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் தலைமையிலான அமர்வு, "போராட்டத்தின்போது 7 ஆயிரம் பேர் கூடுவது குறித்து காவல்துறைக்கு தெரியாமல் இருந்து நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் நடந்து வந்திருக்க முடியாது. இது மாநில அரசின் முழு தோல்வியையே காட்டுகிறது" என நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.

24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.

நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” என்று தெரிவித்துள்ளது.

பாஜக போராட்டம்: மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாக கெட்டுவிட்டதையே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு உணர்த்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதை வலியுறுத்தி பாஜகவினர் சிலிகுரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மம்தா பானர்ஜி பேரணி: இதனிடையே, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதி கேட்டு முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆக. 16) மாலை கொல்கத்தாவில் பேரணி நடத்த உள்ளார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர் இந்த பேரணியை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x