Published : 16 Aug 2024 12:20 PM
Last Updated : 16 Aug 2024 12:20 PM

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மருத்துவப் பரிசோதனை

ஆர்.ஜி.கர் மருத்துவுமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராய் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

முதலில் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சிபிஐ நடவடிக்கை: இதன் ஒரு பகுதியாக, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரான சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆக. 16) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தொடரும் போராட்டம்: இதனிடையே, கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரத்துக்கு நீதி கேட்டு மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர் சமிக்ஷா பேடி தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளோம். நாங்கள் பணிபுரியும் மருத்துவமனை புனரமைக்கப்பட்டதால் இங்கு நிலைமை மோசமாக இல்லை. நாங்கள் ஓய்வெடுப்பதற்கு பணி அறைகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு தளத்திலும் காவலர்கள் இருக்க வேண்டும். முன்பு, தீவிரமாக கோபத்தை வெளிப்படுத்தும் நபர்களால் சில சமயங்களில் பாதுகாப்பற்றவர்களாக இருந்தோம். இப்போது, ​​இதுபோன்ற கொடூரமான சம்பவங்களால் நாங்கள் பயப்படுகிறோம். மருத்துவமனையில் இரவு பணியை நிறுத்த முடியாது. இதுபோன்ற சம்பவங்களால் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வு காண வேண்டும்" என சமிக்ஷா பேடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி முழுவதும் உள்ள ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்கங்கள் (ஆர்டிஏக்கள்) இன்று (ஆகஸ்ட் 16) கூட்டுப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. டெல்லியில் உள்ள நிர்மான் பவனில் மதியம் 2 மணிக்கு போராட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா கேட்டில் மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்த டெல்லி மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.

நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon