Published : 16 Aug 2024 04:04 AM
Last Updated : 16 Aug 2024 04:04 AM
பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியான பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
கடந்த 2 மாதங்களில் சித்தராமையாவுக்கு எதிராக பழங்குடியினர் ஆணைய நிதி மோசடி, மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம் ஆகியவற்றை பாஜக பூதாகரமாக மாற்றியது. சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பாஜகவினரின் தொடர் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் மேலிடத்தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் சித்தராமையா மீதுஅதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கர்நாடக காவல் துறையின் முக்கிய அதிகாரி தலைமையில் ரகசிய குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த குழுவினர் சித்தராமையாவுக்கு எதிராக ஊழல் புகார் கிளப்பும் பாஜக மூத்த தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளின் ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராய்ந்து, அதன்விசாரணையை முடுக்கி விடவும்முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு, சுரங்க முறைகேடு வழக்கை தூசு தட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். இதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா மீதான நில அபகரிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கான பணிகளை சித்தராமையாவின் சட்ட ஆலோசகர் போபண்ணா தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டுள்ளது. இதேபோல மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி மீதான வழக்குகளையும் இந்தக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். அது தொடர்பான ஆவணங்களை ஊடகங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT