Published : 16 Aug 2024 04:56 AM
Last Updated : 16 Aug 2024 04:56 AM
குடிவாடா: ஆந்திராவில் மீண்டும் அண்ணா கேன்டீனை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குடிவாடாவில் நேற்று திறந்து வைத்தார். இங்கு, ஒரு வேளைக்கு ரூ.5-க்கு உணவு வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல், ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா கேன்டீன்களை தொடங்கினார். இதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே தேர்தல் வந்து, ஜெகன்மோகன் ரெட்டிமுதல்வரானார். அவர் அண்ணாகேன்டீன்களை மூட உத்தரவிட்டார். அதையும் மீறி, யாராவது நடத்தினால், அவர்கள் மீது காவல் துறைநடவடிக்கை எடுத்தது. இதனால், ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் மூடுவிழா கண்டது.
ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் மீண்டும் அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.
அதன்படி, சுதந்திர தினமான நேற்று ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், குடிவாடாவில் அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். பின்னர், ஏழைகளுக்கு சந்திரபாபு நாயுடுவும், அவரது மனைவியும் உணவு பரிமாறினர். மேலும், அவர்களுடன் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் என அனைவரும் உணவருந்தினர்.
அப்போது, சந்திரபாபு நாயுடுவுடன் உணவருந்திய 10 ஏழைமக்களிடம் உள்ள பிரச்சினைகளை சந்திரபாபு நாயுடு கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக உதவும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா கேன்டீன்கள் செயல்படும் என்றும், படிப்படியாக செப்டம்பர் இறுதிக்குள் ஆந்திராவில் 203 அண்ணா கேன்டீன்கள் செயல்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ரூ.5-க்கு உணவு: இதற்கு தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள், தனியார் அறக்கட்டளையினர் உதவ முன்வர வேண்டுமெனவும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். அண்ணா கேன்டீன்களில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவுஉணவு ஆகியவை, ஒவ்வொருவேளையும் ரூ.5-க்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT