Published : 15 Aug 2024 07:46 AM
Last Updated : 15 Aug 2024 07:46 AM
புதுடெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி - செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தார்.
அங்கு அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 11-வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதன் பின்னர் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அதில் வளர்ந்த பாரதம் 2047 (விக்சித் பாரத்) குறித்து பேசினார்.
6,000 விருந்தினர்கள்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார், எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி முழுவதும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர், உளவு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT