Published : 15 Aug 2024 03:42 AM
Last Updated : 15 Aug 2024 03:42 AM

78-வது சுதந்திர தின விழா களைகட்டியது: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.படம்: பிடிஐ

புதுடெல்லி / சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.

செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார்,எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். யமுனை நதியை ஒட்டி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு படையினர், உளவு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டைகொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளம் அருகில் வரும் முதல்வரை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு, காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் முதல்வர், 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து, சாதனையாளர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது, இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர்பி.வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம்விருது, வயநாடு நிலச்சரிவின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு துணிச்சலாக சென்று, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

முதல்வரின் நல்ஆளுமை விருது,மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகபணியாற்றிய மருத்துவர், நிறுவனம்,சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கானவிருதுகள், சமூக நலன் மற்றும் மகத்தான சேவைக்கான விருது, சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார்.

9,000 போலீஸார் பாதுகாப்பு: விழா நடைபெறும் புனித ஜார்ஜ்கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னைவிமான நிலையத்துக்கு 7 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் முழுவதும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிண்டா போலீஸ் எஸ்எஸ்பிஅம்நீத் கொண்டால் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய படைகளின் நிலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், எல்லைகட்டுப்பாட்டு பகுதியிலும் (எல்ஓசி)ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படோட்டே - தோடா நெடுஞ்சாலை பகுதியில் சிறப்புசோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, பத்னிடாப் பகுதி அருகே அகார்வனப் பகுதியில் ராணுவ வீரர்களும், ஜம்மு - காஷ்மீர் போலீஸாரும் நேற்று கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x