Published : 14 Aug 2024 03:10 PM
Last Updated : 14 Aug 2024 03:10 PM

“17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என எண்ணவில்லை” - மணிஷ் சிசோடியா

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் ஜாமீன் பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் சிசோடியா. இந்நிலையில், 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என தான் ஒருபோதும் எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி திஹார் சிறையிலிருந்து கடந்த 9-ம் தேதி ஜாமீனில் வெளிவந்த அவர் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது குறித்து பார்ப்போம்.

“அரசியலில் ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது இயல்பு தான். அதே நேரத்தில் ஒரு தனிநபரை சிறைக்கு அனுப்புவது அல்லது கைது செய்வதற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என நான் கருதுகிறேன். மாற்றத்துக்கான அரசியலில் இது தவிர்க்க முடியாத ஒன்று.

அந்த வகையில் மனதளவில் நான் இது மாதிரியான சூழலுக்கு என்னை தயார் செய்து வைத்திருந்தேன். இருந்தாலும் மதுபான கொள்கை வழக்கில் நான் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் என்னை கைது செய்தனர். இதன் மூலம் என்னை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைப்பது தான் அவர்கள் திட்டம். தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் இந்த சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீன் பெறுவது கடினமான காரியம்.

சிறையில் இருந்தபோது செல்லுக்குள் நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரம் வரை இருக்க வேண்டும். யாருடனும் பேச முடியாது. அதனால் எனக்கு நானே நண்பனாக அந்த நேரத்தில் இருந்து கொண்டேன். நான் சிறையில் இருந்து வெளிவந்து சில நாட்கள் தான் ஆகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் எனது பங்கு என்ன என்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். விரைவில் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளி வருவார்” என மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x