Published : 14 Aug 2024 01:39 PM
Last Updated : 14 Aug 2024 01:39 PM

‘போராட்டம் தான் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சுமாரான செயல்பாட்டுக்கு காரணம்’ - சஞ்சய் சிங்

சஞ்சய் சிங்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகளவில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு போராட்டம் தான் காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவில் இருந்து 6 பேர் கலந்து கொண்டனர். இதில் 5 பேர் வீராங்கனைகள் ஆவர். ஆடவர் பிரிவில் 57 கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் கலந்து கொண்டு வெண்கலம் வென்றார். மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் உள்ளது.

"மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த போராட்டம் பல காலம் நடைபெற்றது. இது இந்தியாவில் ஒட்டுமொத்த மல்யுத்த விளையாட்டு சார்ந்த செயல்பாட்டை முடக்கியது. இதனால் ஒரு பிரிவினர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய பயிற்சி அனுபவத்தை பெற முடியவில்லை. அதன் காரணமாக தான் ஒலிம்பிக்கில் சோபிக்க முடியாமல் போனது" என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லி அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் அங்கம் வகித்தனர். பல வாரங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சய் சிங்கு தலைவராக தேர்வானார். பிரிஜ் பூஷணுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் சஞ்சய் சிங் இப்படி சொல்லியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x