Published : 14 Aug 2024 05:33 AM
Last Updated : 14 Aug 2024 05:33 AM
புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர்களால் துவக்கப்பட்ட போராட்டம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. உயிர்தப்பிய அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் மீது தாக்குதல் துவங்கி உள்ளது. அதிலிருந்து தப்பி இந்தியஎல்லைகளில் நுழைய முயன்றஅவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்துக்கள் மீதான தாக்குதலை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான அன்சருல்லாஹ் பங்களா டீம் (ஏபிடி) முன்னின்று நடத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, "அன்சருல்லாஹ் பங்களாவுடன் லஷ்கர்-இ-தொய்பா கடந்த 2022-ம்ஆண்டே கரம் கோத்துவிட்டது. இவர்கள் வங்கதேசத்தின் எல்லையிலுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதலுக்கு குறிவைத்துள்ளனர். திரிபுராவில் 2021-ல் மசூதிகள் தாக்குதலுக்கு உள்ளானது.
இதையடுத்து, அம்மாநிலத் தின் இந்துக்களுக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர். வங்க தேசத்துடன் சேர்த்து திரிபுராவிலும் இந்துக்கள் தாக்கப்படும் அபாயம்இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
ஏபிடி பின்னணி: வங்கதேசத்தில் ஒரு பொதுநல அமைப்பின் பெயரில் ஏபிடி உருவானது. இதற்கு ஏற்பட்ட நிதிச் சிக்கலால் அப்போது வளர முடியாமல் முடங்கியது. பிறகு 2013-ல்அன்சருல்லாஹ் பங்களா டீம்எனும் பெயரில் மீண்டும் உருவெடுத்தது. தீவிரவாத நடவடிக்கை புகார்களால் ஷேக் ஹசீனா அரசு ஏபிடி-யை 2017-ல் தடை செய்தது.
ஏபிடியால் வங்கதேசத்தின் பல முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டனர். கடவுள் மறுப்பு கொள்கைகளை இணையத்தில் எழுதி வந்தவர்களையும் ஏபிடிவிட்டு வைக்கவில்லை. வங்கதேசத்தின் பிரபல வங்கியில் மூவரைசுட்டுக்கொன்றுவிட்டு அடிக்கப்பட்ட கொள்ளையிலும் ஏபிடிக்கு முக்கியப் பங்கிருப்பது அந்நாட்டின் நீதிமன்றங்களில் நிரூபண மானது.
இந்நிலையில், பின்லேடனின் அல்காய்தா அமைப்பின் கிளைகளில் ஒன்றாக ஏபிடி செயல்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. கிழக்காசியாவின் தீவிரவாத புள்ளி விவரங்களின்படி 2013 முதல் இதுவரை ஏபிடியின் தீவிரவாதிகள் 425 பேர் கைதாகி உள்ளனர். ஏபிடிக்கு தடை விதித்திருந்தபோதிலும் அது தொடர்ந்து ரகசிய மாக வளர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT