Published : 14 Aug 2024 05:08 AM
Last Updated : 14 Aug 2024 05:08 AM

தெலங்கானா | பி.டெக், எம்.டெக், எம்பிஏ படித்தும் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்ற முன்வரும் பெண்கள்

கோப்புப் படம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பல அடி ஆழம் வரை இறங்கி, நிலத்திலிருந்து நிலக்கரியை வெட்டி, அதனை லாரிகளில் நிரப்பி மேலே கொண்டு வரும் மிக கடினமாக பணியை ஆண்களே செய்து வந்தனர்.

இப்பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் காச நோயாலும், இதய நோயாலும் பாதிக்கப்பட்டு உயிர் துறந்த சம்பவங்கள் ஏராளம். உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு பணியை, பணிக்காலம் முடியும் முன்பே இழந்தாலோ அல்லது உடல் நலம் பாதிப்படைந்து உயிர் துறந்தாலோ, விபத்தினால் உயிர் விட்டாலோ அந்த ஊழியருக்கு ஆண் வாரிசு இருந்தால் மட்டுமே அந்த சுரங்கத்தில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு வந்தது.

அப்படியே வேலை வழங்கினாலும், அவர் எவ்வளவு பட்டப்படிப்பு, அல்லது பட்ட மேற்படிப்பு படித்து இருந்தாலும், 180 நாட்கள் வரை கண்டிப்பாக சீருடை அணிந்து சுரங்கத்துக்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியைச் செய்ய வேண்டும். அதன் பிறகுதான், அடுத்த கட்டமாக‘ஜெனரல் மஜ்தார்’ என்னும் பணியை மேற்கொள்ள அனுமதிப்பார்கள். அதன் பிறகே படிப்புக்கு ஏற்ற பதவி உயர்வு தரப்படும்.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் வாரிசுகளுக்கும், பெண்களுக்கும் கூட இப்பணியை செய்ய அனுமதி வழங்கவேண்டும் என சிலர் ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அதன் பின்னர், பெண்களும் இங்கு பணியாற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பலராமிடம் கேட்டபோது, ‘‘பெண்கள் இங்குபணியாற்ற முன்வருவது வரவேற்கத்தக்கது. பி.டெக், எம்.டெக், எம்.எஸ்சி, எம்.பி.ஏ என பல உயர்ந்த பட்டப்படிப்புகளை படித்த பெண்களும் இங்கு கஷ்டப்பட்டு உழைக்க முன் வந்துள்ளனர்.

இப்போது 600 பெண்கள் இங்குபணியாற்றுகின்றனர். இதில், 250 பேர் பி.ஏ, பி.காம் போன்ற பட்டப்படிப்பும், 60 பேர் பொறியியல் பட்டப்படிப்பும், 11 பேர் எம்.டெக் படிப்பும்,பலர் எம்பிஏ முதுகலை படிப்பும் படித்து இங்கு பணியாற்றி வருகின்றனர். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்று அதிகமாக சம்பாதிக்கலாம் எனும் இந்த காலத்தில், நாம் படித்த ஊரிலேயே, அல்லது ஊருக்கு அருகிலேயே கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கலாம் எனும் எண்ணம் உள்ளவர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

பலராம்

தற்போது இங்கு 10% பெண்ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சிரிஷா என்னும் பி.காம்படித்த பெண், டம்பர் எனும் நிலக்கரியை லோட் செய்து, அதனை சுரங்கத்தில் இருந்து மேலே கொண்டு செல்லும் அபாயகரமான பணியை மிகவும் தைரியமாக செய்து வருகிறார். இது எனக்கே மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. வரும் காலங்களில் இங்கு பெண் ஊழியர் சதவீதம் அதிகமாகும் என்று நம்புகிறேன். இதற்கு காரணம் இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு மிகச் சிறந்த முறையில் உள்ளது‘‘ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x