Published : 13 Aug 2024 11:28 PM
Last Updated : 13 Aug 2024 11:28 PM
போபால்: பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு மத்திய பிரதேச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் பூண்டு ஒரு காய்கறி வகையைச் சேர்ந்தது தான் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், வியாபாரிகளும் பயன்பெறும் வகையில், அதனை மளிகைக் கடைகளிலும் விற்பனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ம.பி.யில் உள்ள விவசாய அமைப்பு ஒன்று அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு, பூண்டை காய்கறி வகையில் சேர்க்க வழிவகுத்தது. இதனையடுத்து ஒரு சில மாதங்களிலேயே 1972 வேளாண் உற்பத்தி சந்தைக் குழுச் சட்டத்தின் கீழ் பூண்டை ஒரு மசாலாப் பொருளாக மறுவகைப்படுத்தி, விவசாயத் துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பால் மாநிலம் முழுவதுமுள்ள காய்கறி ஏஜென்டுகளின் கமிஷன் பாதிக்கும் என்பதால் உருளைக் கிழங்கு, பூண்டு, வெங்காயம் ஏஜென்டுகள் சங்கம் 2016ஆம் ஆண்டு இந்தூர் அமர்வில் பூண்டை காய்கறியாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. 2017ஆம் ஆண்டு அந்த சங்கத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு, விவசாயிகளை விட ஏஜென்டுகளுக்கு பலனளிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
2017ஆம் ஆண்டு முகேஷ் சோமானி என்பவர் இந்த தீர்ப்பு தொடர்பாக மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் வெங்கடராமன் ஆகியோர் அடங்கிய இந்தூர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நடந்த வந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT