Published : 13 Aug 2024 07:24 PM
Last Updated : 13 Aug 2024 07:24 PM

“நாட்டுக்கு எதிரான தீய சக்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” - ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: இந்தியாவை சீர்குலைத்து, நமது முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தீய சக்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இருந்து இல்லந்தோறும் தேசியக் கொடி இயக்க இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கு முன்பு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "நமது வளர்ச்சியின் விரைவான வேகத்தை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் தடைகளை உருவாக்கி நிலையற்ற தன்மையைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.

நமது மூவர்ணக் கொடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட மக்கள் இதிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் மக்கள் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இல்லந்தோறும் தேசியக் கொடி இயக்கம், அனைத்து இந்தியர்களிடையேயும் ஆழமான தேசபக்தி மற்றும் நாட்டின் பெருமை உணர்வை ஏற்படுத்துவதையும், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் தற்போது மக்கள் இயக்கமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மூவர்ணக் கொடி என்பது வெறும் கொடி மட்டுமல்ல – அது நமது இறையாண்மை மற்றும் கூட்டு அடையாளத்தின் சின்னம். இந்தியர் என்ற அடையாளம் நமது ரத்தத்தில் ஊறியிருக்கிறது. நமது இந்திய அடையாளத்திற்கு சவால் விடுப்பது என்பது, நமது இருப்புக்கு சவால் விடுவதற்கு சமம். மூவர்ணக் கொடியின் கவுரவம், மரியாதை மற்றும் பெருமிதத்தை நாட்டு மக்கள் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

1943 டிசம்பர் 30 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேதாஜி இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். தற்போது நடைபெற்று வரும் விடுதலை அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கவுரவிப்பதற்கான நாட்டின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நமது சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் நாம் நினைவில் கொள்கிறோம். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களை அங்கீகரித்து கவுரவித்துள்ளோம். இதில், பிர்சா முண்டா போன்ற முக்கிய நபர்கள் உட்பட பலர் இளம் வயதில் நாட்டிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்துள்ளனர்.

உலக அரங்கில் இந்தியா மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைப் பர்த்து, வெளிநாட்டு அமைப்புகள் தற்போது இந்தியாவை ஒரு பிரகாசமான உதாரணமாகக் கருதுகின்றன. இது நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய செல்வாக்கை நிரூபிக்கிறது. இந்தியா இனி வெறும் ஆற்றல்களும், சாத்தியக்கூறுகளும் கொண்ட நாடாக மட்டும் இல்லாமல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று வரும் நாடாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x