Published : 13 Aug 2024 05:48 PM
Last Updated : 13 Aug 2024 05:48 PM
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
28 வயதான அந்த பயிற்சி மருத்துவர் கடந்த 8-ம் தேதி இரவு ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்கச் சென்றுள்ளார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஹிரண்மய் பட்டாச்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அரசு, பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பக்கம் இல்லை என்று கூறுவது ஏற்கத்தக்கதாக உள்ளது.
இந்தக் கொலை குறித்து கல்லூரியின் முதல்வர் ஏன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை? இயற்கைக்கு மாறான மரண வழக்கு என பதியப்பட்டிருப்பது ஏன்? முதுகலை பட்டதாரி பயிற்சியாளரின் உடல் சாலையோரத்தில் காணப்படவில்லை. மருத்துவமனையின் முதல்வர் அல்லது கண்காணிப்பாளர் புகார் அளித்திருக்க வேண்டும்.
மேலும், சம்பவம் நடந்த மருத்துவமனையில் இருந்து விலகிய முதல்வர் சந்தீப் குமார் கோஷுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பதவி எப்படி வழங்கப்பட்டது? கல்லூரியின் முதல்வரிடம் ஏன் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், கல்லூரியின் முதல்வர் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றனர். மேலும், இந்த வழக்கின் விவரங்களை ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 10 மணிக்குள் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். “ஆர்.ஜி. கர் மருத்துவர்களின் உணர்வுகளை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். ஆனால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போராட்டத்தை கைவிடுவது குறித்து அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வழக்கை ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆக.18) முடிக்க கொல்கத்தா காவல் துறைக்கு விதித்திருந்தார். இல்லாவிட்டால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறி இருந்தார். இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT