Published : 13 Aug 2024 09:45 AM
Last Updated : 13 Aug 2024 09:45 AM

சிஏஏ சட்டத்தின் கீழ் 20 ஆப்கன் சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை சேர்ந்த 20 சீக்கியர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வார காலத்தில் இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சுமார் 100 நாட்களுக்கு முன்னதாக குடியுரிமை வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குடியுரிமை பெற்ற ஆப்கன் சீக்கியர்களில் சிலர் கடந்த 1997-ல் இந்தியாவுக்கு வந்தவர்கள். அவர்கள் நீண்ட கால விசாவில் இங்கு தங்கி உள்ளனர். மேலும், கடந்த 1992-ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது வந்த சீக்கியர்கள் சுமார் 400 பேர் குடியுரிமை சட்டம் 1955-ன் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பம் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளது.

கடந்த 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நீண்ட கால விசா பெறுவதற்கான நடைமுறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் கொள்ளும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை கருத்தில் கொண்டு இந்த தளர்வு கொண்டு வரப்பட்டது.

அதோடு அப்போது குடியுரிமை சட்டம் 1955-ன் கீழ் குடியுரிமை பெற நீண்ட கால விசா அவசியமானதாக இருந்தது. அதன் கீழ் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்த ஆப்கன் சீக்கியர்கள் தற்போது தங்கள் விண்ணப்பத்தை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் பரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமானதாக பார்க்கப்படுகிறது.

“நான் கடந்த 1992-ல் இந்தியாவுக்கு வந்தேன். இங்கு நீண்ட கால விசாவின் கீழ் தங்கி உள்ளேன். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டி உள்ளது. இந்திய குடியுரிமை வேண்டி குடியுரிமை சட்டம் 1955-ன் கீழ் விண்ணப்பித்துள்ளேன். அதே நேரத்தில் புலம்பெயர்ந்து வரும் ஆப்கன் சீக்கியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற எங்கள் சங்கத்தின் மூலம் உதவி வருகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்ற பணிகளில் அவர்களுக்கு உதவுகிறோம். 100 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களில் சுமார் 20 பேருக்கு தற்போது குடியுரிமை கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்திய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க உள்ளனர்” என்கிறார் டெல்லி கல்சா திவான் நலச் சங்க பொதுச் செயலாளர் ஃபதே சிங்.

48 வயதான தர்லோக் சிங், “இந்தியாவுக்கு கடந்த 2007-ல் குடும்பத்துடன் வந்தார். தற்போது அவரது குடும்பத்தின் மூவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. 18 வயதை எட்டாத அவரது இரண்டு மகன்களுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை.” என்றார்.

குடியுரிமை திருத்த சட்டம் - பின்னணி: மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) வழிவகை செய்கிறது. இந்த சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது.

அதன்படி இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 2 நாட்களுக்குப் பின் இந்த சிஏஏ சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்பதால், இந்த சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனாலும் டெல்லியில் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை நடந்த போராட்டத்தில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கரோனா பெருந்தொற்று காரணமாக இதற்கான விதிகளை அறிவிக்க மத்திய அரசு 9 முறை கால அவகாசம் பெற்றது. இதனால் சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சிஏஏ சட்டம் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது. சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்திய குடியுரிமை கோருபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x