Published : 13 Aug 2024 12:01 AM
Last Updated : 13 Aug 2024 12:01 AM

விமர்சனங்கள் எதிரொலி: ஒளிபரப்பு மசோதாவுக்கான வரைவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!

புதுடெல்லி: ஆன்லைன் கிரியேட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் மசோதாவுக்கான சமீபத்திய வரைவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “வரைவு மசோதா தொடர்பாக அமைச்சகம் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு புதிய வரைவு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களை, ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் இணைத்து ஒழுங்குப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வரைவு மசோதா டிஜிட்டல் கிரியேட்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

டிஜிட்டல் மீடியா தளங்களுக்கான டிஜிபப் மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா போன்ற ஊடக அமைப்புகள், டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இந்த நடவடிக்கை குறித்து தங்களிடம் இதுவரை ஆலோசிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டின.

மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டிஜிட்டல் மீடியா மற்றும் சமூக வலைதளங்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சி இது என்று மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், கடும் விமர்சனம் எதிரொலியாக இந்த வரைவை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) வரைவு மசோதா, 2023’-ஐ கடந்த ஆண்டு நவம்பரில் முன்மொழிந்தது. இந்த மசோதா ஓவர்-தி-டாப் (ஓடிடி) உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் செய்திகளை உள்ளடக்குவதற்கு அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது. மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான சமகால வரையறைகள் மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இதில் சட்டரீதியான அபராதங்கள் போன்றவற்றை விதிக்க வகை செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x