Published : 12 Aug 2024 11:54 AM
Last Updated : 12 Aug 2024 11:54 AM
புதுடெல்லி: கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து, தங்கள் பணியை புறக்கணித்து இந்த போராட்டத்தை திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கினர். புறநோயாளிகள் பிரிவு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் வார்டு சிகிச்சை போன்ற பணிகளை மருத்துவ பணியாளர்கள் புறக்கணித்துள்ளதாக டெல்லி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சார்ந்த பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
நடந்தது என்ன? முன்னதாக, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சகஜமாக நடமாடிய கொலையாளி: “பெண் மருத்துவரை வன்கொடுமை மற்றும் கொலை செய்த பிறகு தான் தங்கி இருக்கும் இடத்துக்கு கொலையாளி சஞ்சய் ராய் திரும்பியுள்ளார். அங்கு நீண்ட நேரம் தூங்கிய பிறகு எழுந்துள்ளார். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போது தான் அணிந்திருந்த ஆடையை துவைத்துள்ளார். தடயத்தை அழிக்கும் நோக்கில் இதனை செய்துள்ளார். இருந்தும் நாங்கள் தேடுதலில் ஈடுபட்ட போது ரத்த கறை படிந்த அவரது ஷூவை (காலணி) கண்டெடுத்தோம். இந்த வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என போலீஸ் கமிஷனர் வினீஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT