Published : 12 Aug 2024 05:47 AM
Last Updated : 12 Aug 2024 05:47 AM
புதுடெல்லி: இந்திய கடற்படையில் இரண் டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிகாட் விரைவில் சேர்க்கப்படவுள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. இவற்றில் 6 ரஷ்யாவின் கிலோ வகையைச் சேர்ந்தது. 4 ஜெர்மனியின் எச்டிடபிள் ரகத்தை சேர்ந்தது, 6 பிரான்ஸ் நாட்டின் ஸ்கார்பீன் ரகத்தை சேர்ந்தவை.
கடந்த 2018-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹன்ட் என்ற நீர்மூழ்கி கப்பல் மட்டும் அணு சக்தியில் இயங்க கூடியது. இதில் 83 மெகா வாட் திறனுள்ள அணு உலை உள்ளது. மேலும் இது அணு ஏவுகணைகளை ஏவும் திறனுடையது. இவை எஸ்எஸ்பிஎன் என அழைக்கப் படுகிறது.
இதே போன்ற மற்றொரு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் 6 ஆயிரம் டன் எடையில் ஐஎன்எஸ் அரிகாட் என்ற பெயரில் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு, பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும்.
சீன கடற்படையில் ஏற்கனவே 60 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் 6 எஸ்எஸ்பிஎன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. 6 எஸ்எஸ்என் ரக நீர்மூழ்கி கப்பல்கள். சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்திய கடற்படைக்கு இன்னும் 18 டீசல் - எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், நான்கு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 6 எஸ்எஸ்என் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தேவை. இவற்றில் ரூ.40,000 கோடி மதிப்பிலான 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது.
இதேபோல் 6 ஆயிரம் டன் எடையில் எஸ்எஸ்என் எனப்படும் ‘ஹன்டர் கில்லர்’ நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 95 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க 10 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் 4 எஸ்எஸ்என் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க பிறகு ஒப்புதல் அளிக்கப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT