Published : 12 Aug 2024 07:14 AM
Last Updated : 12 Aug 2024 07:14 AM
புதுடெல்லி: வக்பு சட்டதிருத்த மசோதா குறித்துஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குழுவின் 31 உறுப்பினர்களை சந்தித்து விளக்கம் அளிக்க அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய பொதுச்செயலாளர் மவ்லானா பசுலூர் ரஹ்மான் முஜத்திதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாரிய தலைவர் மவ்லானா காலித் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வாரியத்தின் சட்ட நிபுணர்களுடன் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்க்க வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்டி வக்பு திருத்த மசோதாஅபத்தமானது என்று அரசியல் தலைவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அத்துடன் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை நிராகரித்துள்ளன. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து சிறுபான்மை மக்களுக்காக பேசினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டங்களில் இந்த மசோதாவில் உள்ள பாதகமான பிரிவுகளை நீக்க எதிர்க்கட்சிகளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினர்களை வாரியத்தின் உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைக்க உள்ளனர்.
முன்னோர்களின் பாரம்பரியத்தை முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டும், வக்பு சொத்துகள் அபகரிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. பள்ளிவாசல்களின் இமாம்கள் வக்பு குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT