Published : 11 Aug 2024 09:47 PM
Last Updated : 11 Aug 2024 09:47 PM
புதுடெல்லி: அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.
செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?
சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” இவ்வாறு ராகுல் காந்து அதில் தெரிவித்துள்ளார்.
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
Honest investors across the country have pressing questions for the government:
- Why… pic.twitter.com/vZlEl8Qb4b— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
நடந்தது என்ன? - அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் கட்டுரை, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அந்தக் கட்டுரையில், "அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார்." என்று கூறியுள்ளது.
அதே கட்டுரையில், "அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. இப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினாலேயே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றும் கூறப்பட்டுள்ளது.
அதானி - செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை தொடர்புபடுத்தி ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் தகவல் மீண்டும் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...