Published : 11 Aug 2024 05:12 AM
Last Updated : 11 Aug 2024 05:12 AM

ஆந்திராவில் கோதாவரி நதிக்கரையில் வெள்ளத்தில் சரிந்த சினிமா மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க கிராம மக்கள் தீவிர முயற்சி

கோதாவரி நதிக்கரையின் ஓரம் கம்பீரமாக காட்சி அளித்து கொண்டிருந்த ‘சினிமா மரம்’.

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், குமாரதேவம் எனும் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான தூங்குமூஞ்சி மரம் இருந்தது. கோதாவரி நதிக்கரை படித்துறையை ஒட்டி இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இந்த மரம் அமைந்திருந்தது. இந்த இடம் மிகவும் ரம்மியமாக இருந்ததால் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் இங்கு படை எடுத்தனர்.

முதன் முதலில் 1975-ல் ‘பாடிபண்டலு’ எனும் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது. அதன் பிறகு தெலுங்கு அல்லது ஹிந்தியில் என ஏதாவது ஒரு திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டு வந்தது. இப்படியாக 50 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

என்.டி. ராமாராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சோபன்பாபு, கமல்ஹாசன், சிரஞ்சீவி முதல் இப்போதைய இளம் நாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வரை பலரது திரைப்படங்கள் இந்த மரத்தின் முன் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் இயக்குநர் வம்சியின் படம் என்றால் இம்மரம் கண்டிப்பாக ஒரு காட்சியிலாவது இடம் பெறும். இவரை போல் பல திரைப்பட இயக்குநர்களின் ‘சென்டிமென்ட்’ மரமாகவும் இது இருந்தது. கே.விஸ்வநாத், ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி, பாப்பு உள்ளிட்ட பிரபல இயக்குநர்களும் இந்த மரத்தை சுற்றிலும் தங்கள் படக் காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.

பல சீற்றங்களை தாங்கிய மரம்: இம்மரம் கடந்த 1953, 1986, 1996 மற்றும் 2022-ல் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை தாங்கி நின்றது. கடந்த 150 ஆண்டுகளும் மேல் அசராமல் கம்பீரமாக நின்றது. ஆனால் கனமழையால் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கடந்த 5-ம் தேதி சாய்ந்தது.

`சினிமா மரம்’ சரிந்ததை அறிந்தகிராம மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜமுந்திரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்தி, இணை ஆட்சியர் ஹிமான்ஷு கவுசிக் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மரம் சரிந்த இடத்தை பார்வையிட்டனர். இம்மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்தி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் அம்மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முன்வந்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்த மரத்திற்கு ரசாயன பூச்சு செய்யப்படும் என்றும் பிறகு 45 முதல்60 நாட்கள் வரை இதற்கு முழுவதுமாகஇயற்கை ரசாயனங்களால் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும் என்றும் 4 மாதங்களுக்கு பிறகு இம்மரம் இயற்கையாகவே துளிர் விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மரம் மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்கும் என்றும் இப்பகுதி ஒரு சுற்றுலா தலமாக விளங்கும் என்றும் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் ராமகிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x