Published : 11 Aug 2024 07:32 AM
Last Updated : 11 Aug 2024 07:32 AM
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகர மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ), அதற்கு மாற்றாக 14 வீட்டு மனைகளை அவருக்கு வழங்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதில் முதல்வர் சித்தராமையா பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பாஜகவும், மஜதவும் மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, சமூகஆர்வலர்கள் 2 பேர் சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார்அளித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து சித்தராமையா விளக்கம் அளித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் பாஜகவின் பாதயாத்திரையில் கூட்டாக பங்கேற்றனர். பின்னர் குமாரசாமி பேசுகையில், ‘‘முதல்வர் சித்தராமையா ஊழலில் ஈடுபட்டிருப்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது. விதிமுறையை மீறி தனது மனைவிக்கு சாதகமாக நடந்துகொண்டுள்ளார். அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்'' என விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து எடியூரப்பா பேசுகையில், ‘‘கர்நாடகாவில் பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம், பட்டியலினத்தவர் மேம்பாட்டு நிதி, நிலம் ஒதுக்கீடு ஆகியவற்றில் சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரித்தால் அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனாலேயே வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற மறுக்கிறார்.
சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை பாஜக, மஜதவின் போராட்டம் ஓயாது. அவரை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மீது ஊழல் புகார் கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். மக்களின் பணத்தையும் சொத்தையும் அபகரித்த அவருக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்'' என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ‘‘முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர். அவருக்கு என்னை பற்றி விமர்சிக்க தகுதியில்லை. குமாரசாமியும் எடியூரப்பாவும் சந்தர்ப்பவாதிகள். என்னை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதற்காக கூட்டு சேர்ந்துள்ளனர்.
எடியூரப்பாவும் பாஜகவினரும் கன்னட மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அதனையும் மீறி அவர்கள் வென்றால், பாஜக மேலிடமே எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கொடுக்காது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT