Published : 10 Aug 2024 05:58 PM
Last Updated : 10 Aug 2024 05:58 PM

“தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செயல்படுகின்றன” - குடியரசுத் துணைத் தலைவர்

புதுடெல்லி: தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அங்கு ஆற்றிய உரையில், "ஒரு நாட்டின் நீதி அமைப்பு, அதன் செயல்பாடு அதன் ஜனநாயக அமைப்பை வரையறுக்கிறது. ஒரு தன்னாட்சியான, வலுவான நீதி அமைப்பு மிகச்சிறந்ததாகும். ஏனெனில் இது வாழ்க்கையின் உயிர்நாடி.

உயர் நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதியின் பதவியும் நீதி வழங்குவதில் முதன்மையானவை. மக்களாட்சியின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி, அரசியலமைப்பு ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அடிப்படையில், அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை மிகக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

வரலாற்றின் அறிவு, ஞானத்திலிருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நமது நாகரிக நெறிமுறைகளில் அது ஆழமாகப் பதிந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் மூன்று தூண்களைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். இந்த அமைப்புகள் பாதிக்கப்படக் கூடியதாக மாற்றப்பட்டால், அவை நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அதன் மூலம் நமது வளர்ச்சிப் பாதையைத் தடம்புரளச் செய்யும்.

நமது தேசத்திற்கு விரோதமான சக்திகள் ஆங்காங்கே உள்ளன. அவை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் செயல்படுகின்றன. தீங்கு விளைவிக்கும் செயல்திட்டத்தைக் கொண்டுள்ளன. தீய திட்டங்கள் உடனடியாக அடையாளம் காண முடியாதவை. ஆனால் அவற்றை அடையாளம் கண்டு தடுக்க வேண்டியது அவசியம்.

சில நாட்களுக்கு முன்பாக நமது அண்டை நாடுகளில் நடந்த சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்கும் என்று சிலர் கூறுவது ஆழ்ந்த கவலை அளிக்கின்றது. இது தேச விரோதமானது மட்டுமல்ல. தேசத்தை தடம்புரளச் செய்யும் நோக்கம் கொண்டது. நாம் எப்போதும் நமது தேசத்தின் நலனை முதன்மையாகப் பார்க்க வேண்டும். நமது ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் இந்த தீய நோக்கங்களிலிருந்து நமது நிறுவனங்களை பாதுகாக்க நாம் பாடுபடுவோம்.

ஜனநாயக மாண்புகளை நிலைநிறுத்துவதற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறையை வளர்ப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. ஒரு வேதனையான நிகழ்வை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அது சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது வரலாற்றின் மிகக் கொடூரமான இருண்ட காலகட்டமாகும். அது ஜூன் 1975 -ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலை ஆகும். அந்த நேரத்தில், நீதித்துறை சர்வாதிகார ஆட்சிக்கு அடிபணிந்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் இதயத்தில் தேசியவாதம் இருந்தது.

அவசரநிலைக் காலம் குறித்து இளைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். உயர்மட்டத்தில் உள்ள நீதித்துறை அடிபணியாமல் இருந்திருந்தால் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது. நமது தேசம் இதற்கு முன்னரே பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும்.

ஜூன் 25 ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைச்சரவை அல்லாமல் ஒரு தனிநபரால் பொறுப்பற்ற முறையில் மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை இந்த தினம் நினைவூட்டுகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து நிறுவனங்களின் பங்களிப்பும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தின் பங்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். நீதித்துறையின் பங்கு என்னவென்று நாம் அறிவோம். அனைவரும் நமது பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டு தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x