Published : 10 Aug 2024 12:23 PM
Last Updated : 10 Aug 2024 12:23 PM
புதுடெல்லி: இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க விதிகளில் இடமில்லை என காங்கிரஸ் தலைமையிலான அரசு 2013ல் அளித்த பதிலை, வயநாடு நிலச்சரிவு தொடர்பான கோரிக்கைக்கு மத்திய அரசு சுட்டிக்காட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்கும் விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சரான கேரளாவைச் சேர்ந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த பதிலை, தற்போதைய அரசு சட்டிக்காட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முல்லப்பள்ளி ராமச்சந்திரன், 2013ல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், “இயற்கை பேரிடரை தேசிய பேரழிவாக அறிவிக்க எந்த விதியும் இல்லை. கடுமையான இயற்கை பேரிடரை அதன் தீவிரம், அளவு, நிவாரண உதவியின் அளவு, சிக்கலைச் சமாளிக்கும் மாநில அரசின் திறன், மாற்று வழிகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடுமையான இயற்கை பேரிடரை மதிப்பிடுகிறது. இதன் அடிப்படையிலேயே நிதி உதவி, நிவாரணம் போன்றவற்றை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்கிறது.
இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது உடனடி நிவாரணம் மற்றும் உதவிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இவ்விஷயத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை. இருப்பினும், கடுமையான இயற்கை பேரிடருக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து (NDRF) கூடுதல் உதவி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதன்மையான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
2013ல் மக்களவையில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த இந்த பதிலை, தற்போதைய அரசு வயநாடு விவகாரத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துளளன.
இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா சென்றுள்ளார். விமானம் மூலம் கன்னூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT