Published : 10 Aug 2024 04:32 AM
Last Updated : 10 Aug 2024 04:32 AM
புதுடெல்லி: ஒரு வங்கி கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்க வகை செய்யும் வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.78,000 கோடியாக அதிகரித்துஉள்ளது. பல்வேறு காரணங்களால் பணத்தை எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிசட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
தற்போது வங்கிகளின் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கில் ஒரு நியமனதாரரை மட்டுமே நியமிக்க முடியும். புதிய மசோதாவின்படி ஒரு வங்கி கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமித்து கொள்ள முடியும்.
தற்போதைய நடைமுறைகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை வங்கிகள் சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாரத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி ஒரு மாதத்தில் 15-ம் தேதிமற்றும் 30-ம் தேதிகளில் வங்கிகள் சிறப்பு அறிக்கையை தாக்கல் செய்யலாம். புதிய மசோதாவில் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக் காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது.
வங்கி சட்டங்கள் திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “5 சட்டங்களில் திருத்தம் செய்து ஒரே மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் விவகாரத்தில் மாநில அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படக்கூடும்’’ என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறும்போது, “ஒன்றுஅல்லது 2 கூட்டுறவு வங்கிகளுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை கருத்தில் கொண்டே திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கவனத்தில் கொள்ளப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT