Published : 10 Aug 2024 04:36 AM
Last Updated : 10 Aug 2024 04:36 AM

வங்கதேச சிறைகளில் இருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவில் நுழைவதற்கு வாய்ப்பு

புதுடெல்லி: ‘‘வங்கதேச சிறைகளில் இருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவில் நுழைய வாய்ப்புள்ளது’’ என எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்த வன்முறையின்போது, வங்கதேசத்தில் உள்ள 5 சிறைகளில் இருந்த கைதிகளை போராட்டக்காரர்கள் வெளியேற்றினர். நர்சிங்கி சிறையில் இருந்து தப்பியவர்களில் 400 கைதிகள் மட்டும் சரணடைந்துள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி, ஹெபாசத்-இ-இஸ்லாம் அமைப்புகளைச் சேர்ந்ததீவிரவாதிகள் சரணைடையவில்லை. இவர்களில் பலர் தாங்கள் பதுக்கிவைத்துள்ள ஆயுதங்களை விற்க இந்தியாவுக்குள் நுழையலாம் என எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் போராட்டத்தின் போது போலீஸார் பலரும் பணிக்கு திரும்பவில்லை. அவர்கள்வழக்குகளுக்கு பயந்து இந்தியாவுக்குள் நுழையலாம் என கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை சோதனைசாவடியில் வங்கதேச எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர். அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வங்கதேச மக்கள் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 4 சம்பவங்கள் நடைபெற்றன.

மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4096 கி.மீ நீள இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வீரர்கள் போதிய அளவில் இல்லை. எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட முள்வேலிகளில் பல இடங்கள் ஓட்டையாகவும், சில பகுதிகளில் நீர்நிலைகள்இருப்பதாலும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதன் வழியாக ஏற்கனவே கால்நடைகள், தங்கம், போதைப் பொருட்கள், மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தல் நடைபெறு கின்றன.

இதனால் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வங்கதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஊடுருவல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வரு கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x