Published : 09 Aug 2024 04:06 PM
Last Updated : 09 Aug 2024 04:06 PM
புதுடெல்லி: மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வந்த மாணவிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், "பெண்கள் பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில் உள்ள கல்லூரி ஒன்று, மாணவ - மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. கல்லூரியின் உத்தரவு தங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும் யுஜிசியின் விதிமுறைக்கு முரணானது என்றும், கல்லூரியின் நடவடிக்கையை எதிர்த்து 9 முஸ்லிம் மாணவிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஜூன் 26-ம் தேதி மாணவிகளின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “மாணவ - மாணவிகள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது. மாணவிகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” என்று கல்லூரிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அம்மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை இடைக்கலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். இதில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மேலும் விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், “இஸ்லாமிய பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வதுபோல் மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா, அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்துவிடலாமே? அப்படியானால், அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?. மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து பயில வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
அதேநேரம், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவிகள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி நிர்வாகம் சார்பில், “இந்த ஒரு விஷயத்தை ஒரு அனுமதித்தால், மற்ற மத மாணவர்கள் தங்கள் மதத்தின் குறையீடு, ஆடைகளை அணிந்து வருவார்கள். இவை, கல்லூரியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரியில் 441 இஸ்லாமிய மாணவிகள் இருக்கின்றனர். எனினும், வழக்கு தொடுத்த இந்த மாணவிகளைத் தவிர வேறு யாருக்கும் ஹிஜாப் தடையில் சிக்கல் இல்லை. மற்றவர்கள் அனைவரும் ஹிஜாப் தடையை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று வாதிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT