Published : 09 Aug 2024 12:38 PM
Last Updated : 09 Aug 2024 12:38 PM
புதுடெல்லி: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. நான் முன்பே கூறியது போல் இந்த வழக்கில் உண்மை, ஆதாரம் இல்லை. எங்கள் தலைவர்கள் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். மணிஷ் சிசோடியாவும் சிறையில் அடைக்கப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். எங்களுக்கு நீதி கிடைத்ததற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி கூறுகிறேன். அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் விரைவில் வெளியே வர வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மத்திய அரசின் சர்வாதிகாரத்தின் மீது அறைந்த அடி இது.
ஆம் ஆத்மி கட்சிக்கும், டெல்லி மக்களுக்கும் பெரும் நிம்மதியை இந்த தீர்ப்பு அளித்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோருக்கு நீதிக்கான பாதை விரைவில் திறக்கப்படும். மணிஷ் சிசோடியாவின் 17 மாத வாழ்க்கை வீணாகிப் போனது குறித்து நாட்டின் பிரதமர் கணக்கு சொல்வாரா? மணிஷ் சிசோடியா வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மிகப் பெரிய நிவாரணம். விரைவில் எங்கள் இரு தலைவர்களும் வெளியே வருவார்கள்” என்று தெரிவித்தார்.
மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். பின்னர் பேசிய அவர், “இன்று உண்மை வென்றுள்ளது. டெல்லி மாணவர்கள் வென்றுள்ளனர். ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கியதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.
மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், “அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் டெல்லி அரசை வழிநடத்தி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.
மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் குறித்து பேசிய டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சவுரப் பரத்வாஜ், “இது ஒரு பெரிய நாள். நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒரு மைல் கல்லாக இருக்கும். மணிஷ் சிசோடியா மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. அதை நிரூபிக்காமல் 17 மாதங்கள் அவரை சிறையில் அடைத்துள்ளது மத்திய அரசு. மனீஷ் சிசோடியாவின் 17 மாத காலத்தை அவரது குடும்பத்தினருக்கு திருப்பித் தர முடியுமா?” என தெரிவித்தார்.
மணீஷ் சிசோடியாவுக்கு முன்பே ஜாமீன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நமது சட்ட அமைப்பில் இது விதி. ஏறக்குறைய 2 வருடங்களுக்குப் பிறகு அவர் வெளிவருகிறார். இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து. அதே ஆண்டு மார்ச் 9-ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment