Published : 17 May 2018 07:42 AM
Last Updated : 17 May 2018 07:42 AM
கோதாவரி ஆற்றில் அடிக்கடி படகு விபத்துகள் நடைபெற்று பலரின் உயிர் போக காரணமாக உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று ராமாராவ் கூடம் பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 22-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இது ஒரு அரசியல் கொலை. கடந்த 6 மாதங்களில் இது 3-வது படகு விபத்தாகும். சமீபத்தில் கூட கோதாவரி ஆற்றில் 120 பயணிகள் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். லைசென்ஸ் இல்லாமலும், ஆளும் கட்சியினரின் மேற்பார்வையிலும் இந்தப் படகுப் போக்குவரத்து நடத்தப்படுகிறது. ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே விபத்துகளுக்கு காரணம். இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT