Published : 08 Aug 2024 06:53 PM
Last Updated : 08 Aug 2024 06:53 PM

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை பயன்படுத்த முடியாததன் காரணம் என்ன? - மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாததன் காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் இன்று (வியாழன்) எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 348 (1) (ஏ), உச்சநீதிமன்றம் மற்றும் ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 348 (2), ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன், அந்த மாநிலத்தில் அதன் முதன்மை இருப்பிடத்தைக் கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில், இந்தி மொழியையோ அல்லது மாநிலத்தின் எந்தவொரு அலுவல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் பயன்படுத்த அதிகாரம் அளிக்கலாம் என்று கூறுகிறது.

மேலும், 1963ஆம் ஆண்டு ஆட்சிமொழிச் சட்டத்தின் 7ஆம் பிரிவு, ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன், அந்த மாநிலத்திற்கென உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதனையும், ஆங்கில மொழியுடன் கூடுதலாக இந்தி அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கலாம் என்று கூறுகிறது. அத்தகைய மொழியில் (ஆங்கில மொழி தவிர) ஆணை பிறப்பிக்கப்பட்டால், அதனுடன் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆங்கில மொழியில் அதன் மொழிபெயர்ப்பு இருக்கும்.

ஆட்சிமொழிக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, 21.05.1965 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு கருத்துருவிற்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் இசைவு பெறப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் இந்தி பயன்படுத்த 1950 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் பிரிவு 348 (2) -ன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டது. அமைச்சரவைக் குழுவின் 21.05.1965 நாளிட்ட முடிவிற்குப் பிறகு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து உத்தரப் பிரதேசம் (1969), மத்தியப் பிரதேசம் (1971) மற்றும் பிஹார் (1972) ஆகிய உயர் நீதிமன்றங்களில் இந்தியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் முறையே தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம் மற்றும் கன்னட மொழிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு, தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடக அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு கருத்துரு வரப் பெற்றுள்ளது.

1965ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனை பெறப்பட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனது 16.10.2012 நாளிட்ட கடிதம் வாயிலாக, 11.10.2012 அன்று நடைபெற்ற முழு நீதிமன்றம் ஆலோசனையில், உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்ததாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் மற்றொரு வேண்டுகோளின் அடிப்படையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த முடிவை மறு ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தின் இசைவினை தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அரசு ஜூலை, 2014-ல் கேட்டுக் கொண்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனது 18.01.2016 நாளிட்ட கடிதத்தில், விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்த முன்மொழிவுகளை ஏற்க இயலாது என்று முழு நீதிமன்றம் ஒருமனதாக தீர்மானித்தது என்று தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 130ன்படி, உச்ச நீதிமன்றம் டில்லியில் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவ்வப்போது நியமிக்கும் பிற இடம் அல்லது இடங்களில் அமரலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்ற அமர்வுகளை நிறுவுவதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து அவ்வப்போது பெறப்பட்ட முறையீடுகளின் அடிப்படையிலும், பதினோராவது சட்ட ஆணையத்தின் 125-வது அறிக்கையின் அடிப்படையிலும், "உச்ச நீதிமன்றம் - ஒரு புதிய பார்வை" என்ற தலைப்பில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. பிப்ரவரி 18, 2010 அன்று நடைபெற்ற முழு நீதிமன்றக் கூட்டத்தில், தில்லிக்கு வெளியே உச்ச நீதிமன்றத்தின் அமர்வுகளை அமைப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நிறுவுவது தொடர்பான ரிட் மனு WP (C) எண் 36/2016-ல், உச்ச நீதிமன்றம் தனது 13.07.2016 தேதியிட்ட தீர்ப்பில், மேற்கூறிய பிரச்சினையை அதிகாரபூர்வ தீர்ப்புக்கான அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது சரியானது என்று கருதியது. இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகளை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில், விரிவானதாக மாற்றும் வகையில், நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து பிற பிராந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்க குறிப்பிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி, இந்திய தலைமை நீதிபதி, செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி இ-எஸ்சிஆர் தீர்ப்புகளை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தலைமையில் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான சட்ட மொழிபெயர்ப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார்.

02.12.2023 நிலவரப்படி, செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் 31,184 தீர்ப்புகள் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தி (21,908), பஞ்சாபி (3,574), கன்னடம் (1,898), தமிழ் (1,172), குஜராத்தி (1,110), மராத்தி (765), தெலுங்கு (334), மலையாளம் (239), ஒடியா (104), பெங்காலி (39), நேபாளி (27), உருது (06), அசாமி (05), காரோ (01), காசி (01), கொங்கனி (01). 02.12.2023 அன்று 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் விவரங்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தின் e-SCR போர்ட்டலில் கிடைக்கின்றன.

இதே போன்ற குழு அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் அந்தந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இ-எஸ்.சி.ஆர் தீர்ப்புகளை 16 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுடன் ஒத்துழைத்து வருகிறது. உயர்நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 4,983 தீர்ப்புகள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, உயர் நீதிமன்றங்களால் அந்தந்த இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், இந்திய பார் கவுன்சில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில், 'பாரதிய பாஷா சமிதி' அமைத்துள்ளது. சட்ட விஷயங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் நோக்கத்திற்காக, அனைத்து இந்திய மொழிகளுக்கும் நெருக்கமான பொதுவான மைய சொற்களஞ்சியத்தை இக்குழு உருவாக்கி வருகிறது.

குஜராத்தி, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய சில வட்டார மொழிகளில் வரையறுக்கப்பட்ட சொல்லகராதி இதுவரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சொற்களஞ்சியங்கள் சட்டவாக்கத் துறையின் இணையதளத்தில் http://legislative.gov.in/glossary-in-regional-language/ சட்ட அமைப்பின் அனைத்து பங்குதாரர்களின் பயன்பாட்டிற்காக" இணைய இணைப்பில் கிடைக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x