Published : 08 Aug 2024 06:19 PM
Last Updated : 08 Aug 2024 06:19 PM

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப அரசு பரிந்துரை

கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள விதிகள் பல ஆண்டுகளாக பல விசாரணை அறிக்கைகள் மற்றும் லட்சக்கணக்கான சம்பந்தப்பட்ட மக்களுடன் நடத்தப்பட்ட பரந்த அளவிலான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை. நாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்களை ஒருசில பேர் கைப்பற்றியுள்ளதால், சாதாரண முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

வக்ஃப் அமைப்புகள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளன. இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு, ஒரு நபர் தனது சொத்தை விற்க முயன்றார். அப்போது அந்த கிராமம் வக்ஃப் சொத்து என்று அவருக்குக் கூறப்பட்டது. கற்பனை செய்து பாருங்கள், முழு கிராமமும் வக்ஃப் வாரிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை மத ரீதியாக பார்க்க வேண்டாம்.

குஜராத்தின் சூரத் நகராட்சியின் தலைமையகம் வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டது. இதனை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இது எப்படி நடக்கும்? நான் ஒரு பௌத்தன். இந்து அல்லது முஸ்லிம் அல்ல. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். இதை மதப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம். மாநகராட்சி தனியார் சொத்தா? நகராட்சி சொத்துக்களை எப்படி வக்ஃப் சொத்தாக அறிவிக்க முடியும்.

வக்ஃப் வாரியங்களை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை 1976 விசாரணை அறிக்கை பரிந்துரைத்துள்ளது. வக்ஃபு வாரியங்களில் அதிக பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த கமிட்டியை நீங்கள்தான் (காங்கிரஸ்) உருவாக்கினீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஷியா, சன்னி, போஹ்ரா, அக்கானி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முஸ்லிம்களில் பிரதிநிதித்துவம் வழங்க இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு சமூகம் சிறிய சமூகங்களை நசுக்கினால், இந்த நாடாளுமன்றம் அதை எப்படி அனுமதிக்கும்?

மாநில வக்ஃப் வாரியங்கள் மாஃபியாவாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர். அவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மாட்டேன். மசோதாவில் உள்ள விதிகள் மத சுதந்திரத்தில் தலையிடவோ அல்லது அரசியலமைப்பை மீறவோ இல்லை. எனினும், இந்தச் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

“மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” - முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல். வக்ஃப் சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்து தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

“இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, கூட்டாட்சி மற்றும் மத சிறுபான்மையினருக்கும் எதிரானது” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“ஒரு சொத்தை வக்ஃப் நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது? அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி. அதற்கு இந்த மசோதா ஆதாரம்” என்று கடுமையாக அசாதுதீன் ஒவைசி எதிர்த்தார். | முழுமையாக வாசிக்க > எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியது என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x