Published : 08 Aug 2024 08:43 PM
Last Updated : 08 Aug 2024 08:43 PM

‘மத உரிமை மீதான தாக்குதலா வக்ஃப் மசோதா?’ - எதிர்க்கட்சிகள் Vs மத்திய அரசு @ மக்களவை

புதுடெல்லி: கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்த புதிய திருத்த மசோதாவின்படி வக்ஃப் வாரியத்தில் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், இந்தச் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மசோதாவை தாக்கல் செய்த பின் உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இதில் முதலில் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். மத உரிமை மீதான நேரடித் தாக்குதல். நாங்கள் இந்துக்கள். ஆனால் அதேசமயம் மற்ற மதங்களின் நம்பிக்கையை மதிக்கிறோம். வக்ஃப் மசோதா மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல்களுக்காகவே பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த முறை இந்திய மக்கள் உங்களுக்குத் தெளிவாகப் பாடம் புகட்டினார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. இது கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல்.

இந்த மசோதா மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் வக்ஃப் ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை திணிக்கிறார்கள். இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். அடுத்து நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு சட்டம் கொண்டுவருவார்கள். பிறகு ஜைனர்களுக்கு.. இப்படியே இது நீளும். இந்திய மக்கள் இப்போது இந்த மாதிரியான பிரித்தாளும் அரசியலை மதிக்கமாட்டார்கள்" என்று கடுமையாக எதிர்த்தார்.

திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், “வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா, முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல; மனித இனத்துக்கே எதிரானது. அரசியல் சாசனத்தின் 30-வது பிரிவை நேரடியாக மீறுகிறது இந்த மசோதா. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்?

ஓர் இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும்? அரசு சொத்துகள் வக்ஃப் வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல” என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங், "வழிபாட்டுத் தலங்களுக்கும் சட்டபூர்வ அமைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த அவையில் உள்ளவர்கள் வக்ஃப் வாரியங்களை கோயில்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், அவை வேறுபட்டவை. இது மசூதிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி அல்ல. வக்ஃப் வாரியங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள். இந்தத் திருத்தம் அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

ஜேடி(யு) எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், “இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது? வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இதனை இந்து கோவில்களுடன் ஒப்பிட்டு முக்கியப் பிரச்சினையில் இருந்து திசை திருப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்) விளக்க வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே பேசுகையில், “வருத்தம் என்னவென்றால், இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாக அறியவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டோம். இது அரசாங்கத்தின் புதிய வழியா?. நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில். நாங்கள் எங்கள் வேலையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மசோதாக்களை கசியவிடுவதற்கு முன் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த மசோதாவை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். அல்லது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஆலோசனைகள் இல்லாமல் மசோதாவை திணிக்க வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்தார்.

கேரள எம்பி என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், “நீங்கள் வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் கவுன்சிலை முழுவதுமாக அதிகாரம் இழக்க செய்கிறீர்கள். அந்த அமைப்பை முற்றிலும் சிதைக்கிறீர்கள். இது அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த மசோதா நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், இது கண்டிப்பாக முறியடிக்கப்படும் என்று இந்த அரசை நான் எச்சரிக்கிறேன்" என்றார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மற்ற மத அமைப்புகளில் மாற்று மதங்களை சார்ந்தவர்கள் உறுப்பினராக இல்லை. அப்படியிருக்கும்போது வக்ஃப் அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது ஏன்? அதனால் என்ன பயன்?. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு பாஜக தங்களது ஆதரவாளர்களை திருப்திப்படுத்த வக்ஃப் மசோதாவை கொண்டு வந்துள்ளது" என்றார்.

அசாதுதீன் ஒவைசி கூறுகையில், "வக்ஃப் திருத்த மசோதா, அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 விதிகளின் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது; தன்னிச்சையானது. இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு இந்த சபைக்கு தகுதி இல்லை. இந்த மசோதாவை கொண்டு வருவதன் மூலம், இந்த தேசத்தை பிளவுபடுத்தும் வேலையை மத்திய அரசு செய்கிறது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா சான்றாகும். ஒரு சொத்தை வக்ஃப் நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது?" என்று கேள்வி எழுப்பினார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும், உள்நோக்கத்தோடு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இது இந்திய உணர்வோடு வாழும் இஸ்லாமியர்களை அந்நியர்கள் போல காட்டும் முயற்சி. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்” என்றார்.

பின்னர் எம்.பி.க்கள் கேள்விக்கு விளக்கமளித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, "இந்த மசோதா மூலம் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையையும் பறிக்க முடியாது. உரிமைகளை பெறாதவர்களுக்கு உரிமை வழங்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் உருவாக்கிய சச்சார் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா இன்று கொண்டு வரப்படுகிறது. உங்களால் செய்ய முடியாததால் இந்த திருத்தங்களை கொண்டு வந்தோம். மேலும், முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறுகள் தற்போது திருத்தப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகின்றன. நேற்று இரவு வரை முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் என்னிடம் வந்து வக்ஃப் வாரியங்களை மாஃபியாக்கள் கைப்பற்றியுள்ளதாக கூறினர். சில எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும், ஆனால் தங்கள் அரசியல் கட்சிகளால் அதை சொல்ல முடியாது என்றும்கூட என்னிடம் தெரிவித்தனர். இந்த மசோதா குறித்து நாடு தழுவிய அளவில் பல முறை ஆலோசனைகளை நடத்தியுள்ளோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்த மசோதாவை ஆதரித்தால் கோடிக்கணக்கான மக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வக்ஃப் வாரியத்தை கைப்பற்றி சாதாரண மக்களுக்கு நீதி வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரை: இறுதியில், “மாநில வக்ஃப் வாரியங்கள் மாஃபியாவாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர். அவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் அரசியல் வாழ்க்கையை அழிக்க மாட்டேன். மசோதாவில் உள்ள விதிகள் மத சுதந்திரத்தில் தலையிடவோ அல்லது அரசியலமைப்பை மீறவோ இல்லை. எனினும், இந்தச் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

வக்ஃப் சொத்துகள்: நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன் கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிக்க, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

என்னென்ன திருத்தங்கள்? - வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை குறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டத் திருத்த மசோதாவில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்ஃப் கவுன்சிலில் ஒரு மத்திய அமைச்சர், 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம்), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்திய அரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர். இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வே செய்யும் அதிகாரம்: மேலும், புதிய மசோதாவில் வக்ஃப் சொத்துகளை சர்வே செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது அவருக்குக் கீழ் இருக்கும் துணை ஆட்சியருக்கோ வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மொத்தம் 8.70 லட்சம் சொத்துகளை வக்ஃப் வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டதிருத்தத்தின் காரணம் என்ன? - இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவது நிலையில் அதிக நிலங்களை கொண்டவை முஸ்லிம்களின் வக்ஃப் சொத்து. இதற்கு நாடு முழுவதிலும் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் அளவிலான 8.7 லட்சம் நிலங்கள் உள்ளன. இப்படி நாட்டின் மூன்றாவது நிலையில் அதிக சொத்துக்கள் கொண்ட வக்ஃப்களால், ஏழை முஸ்லிம்களுக்கு பலன் கிடைப்பதில்லை எனக் கருதப்படுகிறது. இதன் பெரும்பாலான சொத்துக்கள் முஸ்லிம்களில், பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களால் அனுபவிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளன. மேலும் இப்புகார்களில் இந்த இரண்டு தரப்பினரால் பல வக்ஃப் நிர்வாகங்களில் சட்டவிரோதமான தலையீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வக்ஃப்கள் 11 மாதங்கள் முதல் அதிகபட்சம் 30 வருடங்கள் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த விவகாரத்திலும் பல சட்ட மீறல்கள் நடைப்பதாகவும் புகார்கள் உள்ளன. இதுபோல், வாடகைக்கு விடப்படும் நிலங்களில் சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் கட்டிட வரைபடங்கள் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்களில் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. இவை, வக்ஃப்க்கு சொந்தமானவை என்பதால் இவற்றின் மீது அரசு நிர்வாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது சிக்கலாக உள்ளது. இதேபோல், வக்ஃப்களுக்கு தேர்தல் முறையில் முத்தவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்த்தப்டுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் வெறும் மூன்று வருடங்களுக்கு என்றிருந்தாலும் அவர்கள் தம் செல்வாக்கை பயன்படுத்தி பதவி நீட்டிப்பை பெறுவதாகவும் புகார்கள் உள்ளன.

இதன் பிறகும் அவர்கள் வக்ஃப் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீதிமன்றங்களின் வழக்கு தொடுத்து தேர்தலுக்கு தடை பெறுவதும் வழக்கமாக உள்ளது. இந்த தடைகளால் முத்தவல்லி உள்ளிட்ட வக்ஃப்களின் ஜமாத்துகள் பல ஆண்டுகள் தம் பதவிகளில் அமர்ந்துகொள்வதும் உள்ளது. இந்தவகை தவறான முத்தவல்லிகளாலும் குறிப்பிட்ட வக்ஃப்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதையும் மத்திய அரசின் புதிய மசோதா முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, இவற்றை சரிசெய்ய தற்போதைய திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x