Published : 08 Aug 2024 12:40 PM
Last Updated : 08 Aug 2024 12:40 PM

வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

போக்குவரத்து அதிகம் இன்றி காணப்படும் டாக்காவின் மையப்பகுதி

புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் மட்டுமே தாங்கள் இருப்பதாக போராட்டக்காரர்கள் முன்பு தெரிவித்திருந்தனர். தற்போது அவர் பதவியை விட்டு விலகிய பிறகும் அங்கு நிலைமை மோசமாகவே உள்ளது.

தற்போது அங்கு செயல்படும் அரசு இல்லாத நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலரும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் உடமைகளை சமூக விரோதிகள் கொள்ளையடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களில் பலர் முன்கூட்டியே நாடு திரும்பினர். தற்போது அங்கு சுமார் 19 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் இயங்கி வருகிறது. சிட்டகாங், ராஜ்ஷஹி, குல்னா, சில்ஹெட் ஆகிய நகரங்களில் துணை தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும், பாதுகாப்பு கருதி தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் இருந்து அத்தியாவசியமற்ற அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆன்லைன் போர்ட்டலில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “நிலையற்ற சூழ்நிலை காரணமாக, அனைத்து இந்திய விசா மையங்களும் (IVAC) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். அடுத்த விண்ணப்ப தேதி SMS மூலம் தெரிவிக்கப்படும். அடுத்த வேலை நாளில் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x