Published : 08 Aug 2024 04:43 AM
Last Updated : 08 Aug 2024 04:43 AM

‘தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக 10 நாடுகளின் விமானப்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி

புதுடெல்லி: பல நாடுகளைச் சேர்ந்த விமானப்படையுடன் இந்திய விமானப்படை ஏற்கெனவே பல கூட்டுப் பயிற்சிகளில் பங்கெடுத்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 10 நாடுகளின் விமானப்படைகளுடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட கூட்டுப்பயிற்சியை ‘தாரங் சக்தி’ என்பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்ட பயிற்சி கோவை மாவட்டம் சூலூரில் நேற்று முன்தினம் தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம்கட்ட பயிற்சி ராஜஸ்தானின் ஜோத்பூரில் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டுப் பயிற்சியில் 10 நாடுகளைச் சேர்ந்த 67 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இந்திய விமானப்படை சார்பில் 75 முதல் 80 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. 18 நாடுகளைச் சேர்ந்த மேற்பார்வையாளர்களும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் கூறுகையில், ‘‘ நட்பு நாடுகளின் விமானப்படைகளுடன் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், சிறந்த பயிற்சிகளை பின்பற்றவும், பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவும் இந்த கூட்டுப் பயிற்சி நடை பெறுகிறது’’ என்றார்.

நேற்று முன்தினம் நடந்த போர் விமானங்கள் அணி வகுப்பில் ஏர்மார்ஷல் ஏ.பி.சிங் தேஜஸ் போர் விமானத்தை இயக்கினார். அவருடன் சென்ற ஜெர்மனி விமானப்படை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் இன்கோ கெர்ஹர்ட்ஸ் டைபூன் ரக போர் விமானத்தில் பறந்து சென்றார்.

இந்த கூட்டுப் பயிற்சி குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் ஏக்கர்மான் கூறுகையில், ‘‘இந்தியாவுடன் ஜெர்மனி முதல் முறையாக மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி ‘தாரங் சக்தி’. இது இந்தியாமற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடனான வலுவான ஒத்துழைப்பை காட்டுகிறது’’ என்றார்.

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் லிண்டி கேமரான் கூறுகையில், ‘‘ தாரங் சக்தி கூட்டு பயிற்சியில் இங்கிலாந்து ராயல் ஏர் ஃபோர்ஸ்’ பங்கேற்பது மகிழ்ச்சி. பாதுகாப்பில் எங்கள் ஒத்துழைப்பு எல்லை கடந்தது. இந்தோ-பசிபிக் பகுதியில் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், செழிப்பை அதிகரிக்கவும் எங்கள் ராணுவம் இணைந்து செயல்படுவது முக்கியமானது’’ என்றார்.

பிரான்ஸ் தூதர் தியேரி மாதோ கூறுகையில், ‘‘இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு பிரான்ஸ். இந்த கூட்டு பயிற்சியில் நாங்கள் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x