Published : 14 May 2018 03:20 PM
Last Updated : 14 May 2018 03:20 PM
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், மூத்த தலைவர்களுக்கும் எதிராக பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார் என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடகத்தின் ஹூப்ளி நகரில் கடந்த 6-ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்கள் காது கொடுத்து கேளுங்கள். உங்களுக்குரிய எல்லையை மீறி நீங்கள் நடந்தால், நான் மோடி, அதன்பின் கடும் விளைவுகளையும், விலையையும் நீங்கள் சந்திக்கவும், கொடுக்கவும் நேரிடும் என்று மிரட்டலாகப் பேசி இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த மிரட்டும் தொனியைக் குறிப்பிட்டும், அதற்குரிய வீடியோ ஆதாரங்களைக் குறிப்பிட்டும் காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாட்டில் இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக்கான கடமையை முறைப்படி ஆற்றிவிட்டுச் சென்று இருக்கின்றனர்.
போற்றத்தகுந்த நம்முடைய ஜனநாயக நாட்டில், அரசின் தலைமைப்பதவியில் இருக்கும் பிரதமர் மிரட்டும் தொனியிலும், எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை.
கடந்த 6-ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், காங்கிரஸ் தலைவர்கள் காது கொடுத்து கேளுங்கள். உங்களுக்குரிய எல்லை மீறி நடந்தால், நான் மோடி, அதன்பின் கடும் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று பேசி இருந்தார்.
ஜனநாயகத்தில்140 கோடி மக்களை ஆளும் அரசிலமைப்புச் சட்டப்படி செயல்படும் ஒரு நாட்டின் பிரதமர், இதுபோன்ற வழக்கில் இல்லாத முறையில் பேசுவது கூடாது. காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும், அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற பிரதமரின் பேச்சு வெளிப்படையாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் இருந்தாலோ அது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாகும். பிரதமரின் மிரட்டும் தொனியிலான பேச்சு அமைதிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும்.
நாட்டின் மிகவும் பழமையான கட்சியான காங்கிரஸ், பல்வேறு சவால்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வந்துள்ளது. இதுபோன்ற எண்ணற்ற சவால்களையும், மிரட்டல்களையும் துணிச்சலுடன் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கடந்துள்ளனர். இதுபோன்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் பயந்து, பணிந்துவிடமாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல்சாசனம் வழங்கிய நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் குடியரசுத்தலைவர் இது தொடர்பாக பிரதமருக்கும், அவரின் அமைச்சரவைக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிகாரத்தையும், சிறப்பு உரிமைகளையும், பெற்று இருக்கும் பிரதமர் அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்று பேசுவது கண்டிக்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாது, எந்தக் கட்சியின் தலைவர்களுக்கும் எதிராக இதுபோன்ற மிரட்டும், அச்சுறுத்தும் வகையிலான பேச்சுக்களை பிரதமர் பேசாத வகையில் மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அவ்வாறு பேசுவது பிரதமரின் பதவிக்கு அழகானது அல்ல.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கபில் சிபில், மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அகமது படேல் உள்ளிட்ட பலதலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.
இதையும் படிக்க மறந்துடாதீங்க....
4 ஆண்டுகளில் ரூ.4,300 கோடி: ஆர்டிஐயில் அம்பலமானது மோடி அரசின் விளம்பரச் செலவு
காவிரி வரைவு செயல்திட்டத்தின் 10 முக்கிய அம்சங்கள்
கேரள சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; நடவடிக்கை எடுக்காத காவல் துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT