Published : 08 Aug 2024 05:44 AM
Last Updated : 08 Aug 2024 05:44 AM
புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த புதிய திருத்தமசோதாவின்படி வக்ஃப் வாரியத்தில் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவதற்கு வாய்ப்புஉள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம்இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநிலவக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன் கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன. இந்தவக்ஃப் வாரியங்களை கண்காணிக்க, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் 1964-ல்தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், வக்ஃப் சட்டத்தில்சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ்உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கைவைத்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மக்களவையில் இதுதொடர்பான திருத்த மசோதாஇன்று (ஆகஸ்ட் 8) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டத் திருத்த மசோதாவில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம்அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்ஃப்கவுன்சிலில் ஒரு மத்திய அமைச்சர்,3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம்), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர். இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்கவேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வே செய்யும் அதிகாரம்: மேலும், புதிய மசோதாவில் வக்ஃப் சொத்துகளை சர்வே செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது அவருக்குக் கீழ் இருக்கும் துணை ஆட்சியருக்கோ வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மொத்தம் 8.70 லட்சம் சொத்துகளை வக்ஃப் வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT