Published : 07 Aug 2024 04:01 PM
Last Updated : 07 Aug 2024 04:01 PM

என்சிஇஆர்டி பாடநூல்களில் அரசியல் சாசன முகவுரை கைவிடப்பட்டதாக காங். கண்டனம் - மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: என்சிஇஆர்டி (NCERT) பாடப் புத்தகங்கள் சிலவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டதாகக் கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சினையை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, அரசியலமைப்பை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, "இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும், அடித்தளமாகவும் இருப்பது முகவுரை. அது என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் சிலவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவதையும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதையும் முகவுரை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் அரசியல் ஜனநாயகமும் சமூக ஜனநாயகமாக மாற்றப்பட வேண்டும் என்பதை முகவுரை வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட முகவுரை நீக்கப்பட்டதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்தார்.

இதற்கு அவைத் தலைவரும், பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா, "எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, பத்திரிகை செய்தியின் அடிப்படையில் இந்த பிரச்சினையை எழுப்புகிறார். அதன் உண்மைத்தன்மையை அவர் உறுதிப்படுத்தவில்லை. அவரது ஞானம் எத்தகையது என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

பத்திரிகை செய்தி உண்மையின் மூலம் அல்ல. என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள்தான் உண்மையின் மூலம், என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மாற்றம் நிகழ்ந்ததாக நான் பார்க்கவில்லை. ஆனால், நான் உறுதியை அளிக்க விரும்புகிறேன். நமது அரசியல்சாசனத்துக்கு முழு மரியாதையை மோடி அரசு அளிக்கிறது. அதில் எந்த மாற்றம் ஏற்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. அரசியல் சாசனம் மற்றும் முகவுரை விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. அரசியல் சாசன தினத்தை நாம் கொண்டாட தொடங்கிவிட்டோம்.

இந்திய அரசியல் சாசனத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கட்சி காங்கிரஸ். நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியபோதுதான் அரசியல் சாசனம் மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பை 2 முறை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால், அதன்பிறகு ஆர்எஸ்எஸ் இன்னும் வலுவாக வந்தது. நாட்டுக்கு சேவை செய்வதே அதன் பணி. அரசியல் சாசன முகவுரை பாதுகாப்பாக உள்ளது. அது வரும் காலங்களிலும் பாதுகாக்கப்படும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x