Last Updated : 07 Aug, 2024 05:52 AM

 

Published : 07 Aug 2024 05:52 AM
Last Updated : 07 Aug 2024 05:52 AM

வக்ஃப் சட்டதிருத்தத்தை தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சி

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள வக்ஃப்கள் மீதான சட்டத்தில் 40 வகையான திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இணையதளம் வழியான கூட்டத்தை, நேற்று முன்தினம் இரவு, முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்நடத்தியது. இதன் தலைவரான மவுலானா காலீத் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசிமற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிபல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளின்படி, மத்தியஅரசின் சட்டதிருத்தம் தவறானது என்பதை விளக்கும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை தனிச்சட்ட வாரியம் நேரில் சந்திக்க உள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின்தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தனிச்சட்ட வாரியநிர்வாகிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய லோக் தள கட்சியின் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளனர்.

தமிழ்நாட்டிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சந்திக்க உள்ளது. இதற்கானப் பொறுப்பை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட வாரியத்தின் உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சிதலைவரான எம்.ஜெச். ஜவாஹிருல்லாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘வக்ஃப் வாரியங்களின் மீது மத்திய அரசு கூறும் புகார்களில் உண்மை இல்லை. வக்ஃப் நிர்வாகிகள், தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன.

நிர்வாகிகள் பதவிகளில் பெண்களை நியமிக்க எந்த தடையும் கிடையாது. தீர்ப்பாய முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்ல சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. வக்ஃப்வாரியங்களின் நிலங்கள், மாநிலஅரசின் வருவாய் துறை நிலஅளவை ஆணையாளர் தலைமையில்தான் அளவிடப்படுகின்றன.

இந்த அரசு ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் எந்த சர்ச்சைக்குரிய நிலத்தையும் வக்ஃப் வாரியம் கையகப்படுத்த முடியாது.

மாறாக வக்ஃப் வாரிய நிலங்கள்தான் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரவிருக்கும் ஜார்க்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை மனதில்கொண்டு இந்தசட்டதிருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது’ எனத் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x