Published : 06 Aug 2024 06:50 PM
Last Updated : 06 Aug 2024 06:50 PM

இந்தியாவில் இருந்து 2 நாட்களில் இங்கிலாந்து புறப்படுகிறாரா ஷேக் ஹசீனா? - குழப்பமும் பின்னணியும்

புதுடெல்லி: இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று (ஆக.5) அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து உடனடியாக அவர் தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம், புதுடெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானத் தளத்தில் தரை இறங்கியது. இதையடுத்து அவர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வங்கதேச நிலவரம் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஹசீனா அதிர்ச்சியில் உள்ளார். ஷேக் ஹசீனாவின் எதிர்கால திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசும் முன், அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவகாசம் அளிக்க விரும்புகிறோம். அதன்படி, எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய ஹசீனாவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்" என தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த எஸ்.ஜெய்சங்கர், "வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். நமது புரிதல் என்னவென்றால், வங்தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தலைவர்களோடு ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்தார். ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உடனடியாக அனுமதிக்குமாறும் மிக குறுகிய கால அவகாசத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரத்தில், விமானம் இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதியை அதற்கான அதிகாரிகள் கோரினர். இதையடுத்து நேற்று மாலை அவர் டெல்லி வந்தடைந்தார்" என குறிப்பிட்டார்.

இதனிடையே, இங்கிலாந்தின் லண்டன் நகரில் தங்க ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாகவும், எனவே இன்னும் இரண்டு நாட்களில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. "ஷேக் ஹசீனாவின் சகோதரி ரேஷானாவின் மகள் துலிப் சித்திக் லண்டனில் வசித்து வருகிறார். ஆளும் தொழிலாளர் கட்சியின் எம்பியாக இருக்கும் அவர், கருவூல பொருளாதார செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். ரேஹானாவும் இங்கிலாந்து குடியுரிமையை பெற்றிருக்கிறார். எனவே, ஷேக் ஹசீனா அவர்களோடு லண்டனில் தங்க திட்டமிட்டிருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் இந்தியாவை விட்டு லண்டனுக்கு புறப்பட்டுச் செல்வார்" என தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஷேக் ஹசீனா லண்டனில் தங்குவதாக இருந்தால், அது அவருக்கு சட்டப்படியான பாதுகாப்பான இடமாக இருக்காது என்று இங்கிலாந்து அரசு கூறி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா நேற்று மாலை இந்தியா வந்ததும், இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்டு தான் லண்டன் வருவதற்கு அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. அதற்கு இங்கிலாந்து அரசு தரப்பில், உங்களுக்கு எதிராக வங்கதேசத்தில் விசாரணை நடக்கும்பட்சத்தில் நீங்கள் விசாரணைக்காக அங்கு செல்ல நேரிடும். அதில் இருந்து சட்ட பாதுகாப்பை இங்கிலாந்து அரசு வழங்காது என்று தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இதனிடையே, வங்கதேச விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லேம்மி, "ஹசீனா தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லிக்கு தெரிவித்துள்ளார். ஹசீனாவுக்கு ஃபின்லாந்திலும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகவும், அதனால்தான் அவர் வடக்கு ஐரோப்பிய நாட்டுக்குச் செல்ல நினைத்ததாகவும் தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x