Published : 05 Aug 2024 02:21 PM
Last Updated : 05 Aug 2024 02:21 PM

டெல்லி மாநகராட்சிக்கு 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நிபுணர்கள் 10 பேரை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலை அதிகாரம் கொண்ட நிபுணர்கள் (ஆல்டர்மென்) 10 பேரை துணைநிலை ஆளுநர் நியமனம் செய்தார்.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் முடிவில் இன்று (ஆக.5) தீர்ப்பளித்த நீதிபதிகள், “டெல்லி மாநகராட்சிக்கு சிறப்புத் திறனாளர்களை நியமிக்கும் அதிகாரம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு உண்டு. டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தில் சிறப்புத் திறன் கொண்ட 10 பேரை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரின் அலுவலகத்துக்குச் சொந்தமான சட்டப்பூர்வ கடமை. இது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதோ, அரசின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என்பதோ கட்டாயம் கிடையாது. துணைநிலை ஆளுநருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது.

டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரம் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957 இன் பிரிவு 3(3)(பி)(1) இலிருந்து பெறப்பட்டது. 10 நிபுணர்களை நியமிக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு அளிக்கும் வகையில் 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்தது.

முன்னதாக, டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “தேசிய தலைநகரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் அதன் சொந்த நகராட்சி நிர்வாகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “டெல்லி துணைநிலை ஆளுநர் அவருக்கு உள்ள அதிகாரத்தின்படி இயங்க வேண்டும். அரசு அல்லது அமைச்சரவையின் ஆலோசனையின்படி இயங்கக்கூடாது" என தெளிவுபடுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x