Published : 05 Aug 2024 12:07 PM
Last Updated : 05 Aug 2024 12:07 PM
புதுடெல்லி: பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎம் எம்பி சிவதாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சிவதாசன், “ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 2024 பதிப்பில் 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு சிறிய முன்னேற்றம் இருந்தாலும், சமீப காலங்களில் இந்தியாவின் செயல்திறன் தொடர்ந்து மோசமாக உள்ளது.
பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகவியலாளர்களான பிரபீர் புர்காயஸ்தா, சித்திக் கப்பன் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில், பிரபல பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகம் சுரண்டப்படக்கூடிய குழுக்களில் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான சரியான ஊதியத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT