Published : 05 Aug 2024 08:33 AM
Last Updated : 05 Aug 2024 08:33 AM

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களில் 10% பேர் வெளிநாட்டினர்

புதுடெல்லி: இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள் வோரில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10 பேரில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவராக உள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெற்ற 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 42 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி நாட்டில் மொத்தம் 18,336 உடல் உறுப்புகளை பெற்றவர்களில், 1,851 பேர் (10%) வெளி நாட்டவர்களாக உள்ளனர்.

அதிகபட்சமாக டெல்லியில் வெளிநாட்டைச் சேர்ந்த 1,445 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (116), மேற்கு வங்கம் (88), உத்தர பிரதேசம் (76), தெலங்கானா (61), மகாராஷ்டிரா (35), கர்நாடகா (15), குஜராத் (11), தமிழ்நாடு (3), மணிப்பூர் (1) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக, வங்கதேசம், நேபாளம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிருள்ள நன்கொடையாளரிடம் இருந்து உறுப்புகளை மாற்றிக் கொள்வதற்காக இந்தியா வருகின்றனர். மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வசதி மற்றும் அதற்கான சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கு இல்லாததன் காரணமாகவே அவர்கள் இந்தியா வருகின்றனர்’’ என்று கூறினர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் குப்தா கூறுகையில், “எங்கள் மருத்துவ மையத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்களில் 30 சதவீதம் பேர் வெளிநாட்டினர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்தும் உறுப்புகளை மாற்றிக் கொள்வதற்காக இங்கு வருகின்றனர். அவர்களுடைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு இந்தியாவில் பத்தில் ஒரு பங்காகவே உள்ளது. வெளிநாட்டிலிருந்து அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியாவை நோக்கி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x