Published : 05 Aug 2024 08:11 AM
Last Updated : 05 Aug 2024 08:11 AM
புதுடெல்லி: பொக்ரான் அணு குண்டு சோதனையை அடுத்து இந்தியா மீது தடை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு, விண்வெளி திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா தயாராகியுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அடுத்த ஆண்டு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிஓம் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ளனர்.
சுபான்சு சுக்லா இந்தியா சார்பில் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவில் விண்வெளி பயிற்சியை முடித்து திரும்பிய இந்திய விமானப்படை விமானிகளில் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லவுள்ளார். இவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்றாக குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் அனுப்பப்படுவார். இவர்கள் இருவரையும் விண்வெளி பயிற்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அமெரிக்கா அனுப்புகிறது. இவர்கள் ஆக்ஸிஓம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் பயிற்சி பெறவுள்ளனர்.
நாசா சம்மதித்தது எப்படி? கடந்த 1990-ம் ஆண்டுகளில் இஸ்ரோவுடன், நாசா இணைந்து செயல்படவில்லை. இந்திய ராக்கெட்டுகளுக்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் கிடைப்பதை தடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டது. அதன்பின் கடந்த 1998-ம் ஆண்டில் பொக்ரான் அணு குண்டு சோதனையை இந்தியா நடத்தியதால், இஸ்ரோவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன.
சந்திரயான்: அதன்பின் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியபோது, நாசாவின் 2 ஆய்வு உபகரணங்களை சந்திரயான்-1 விண்கலத்தில் இணைத்து அனுப்பியது. இதற்காக நாசாவிடம் எந்த கட்டணத்தையும் இஸ்ரோ பெறவில்லை. நிலவில் இருந்து 3,84, 000 கி.மீ தூரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்- 1 சுற்றிக் கொண்டிருந்தது.
நிலவில் நீர் மூலக்கூறுகள் இருந்ததை இந்தியாவும்-அமெரிக்காவும் கூட்டாக கண்டுபிடித்தன. இந்தியாவின் இந்த பெருந்தன்மை, இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப்பின், நாசாவை இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT