Published : 05 Aug 2024 06:03 AM
Last Updated : 05 Aug 2024 06:03 AM

‘வக்ஃப்’ அதிகாரத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும், நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ எனப்படுகின்றன. இவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு, முஸ்லிம்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல் மற்றும் தர்கா பராமரிப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த சொத்துகளை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன்கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன.

இந்த வக்ஃப் வாரியங்களை கண்காணிக்க, வக்ஃப் சட்டத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2013-ம் ஆண்டு இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி, வக்ஃப் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது. நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை குறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘‘வக்ஃப் வாரியம் உரிமை கோரும் அனைத்து சொத்துகளையும் கட்டாயமாக சரிபார்க்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது. மேலும், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் அம்சமும் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளது’’ என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மொத்தம் 8.70 லட்சம் சொத்துகளை வக்ஃப் வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x