Published : 04 Aug 2024 06:39 PM
Last Updated : 04 Aug 2024 06:39 PM

வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா?

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. சாலியாற்றில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்னும் 206 பேர் வரை காணவில்லை. நிலச்சரிவினால் மொத்தம் 1,208 வீடுகள் இடிந்தன. இதில் முண்டக்கையில் 540 வீடுகளும், சூரல்மலாவில் 600 வீடுகளும், அட்டமலையில் 68 வீடுகளும் முற்றிலும் சிதைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மொத்தம் 49 குழந்தைகள் நிலச்சரிவில் காணவில்லை என்று கேரள அரசின் தரவுகள் கூறுகின்றன. 25 அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் புதுமலையில் புதைக்கப்பட்டன. காணாமல் போனவர்களை தேடி வரும் ராணுவம் ரேடார் கருவிகளை பயன்படுத்தி தேடி வருகிறது. மொத்தம் ஆறு இடங்களில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

வாழ தகுதியற்ற பகுதிகள்: நிலச்சரிவால் முதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளான புஞ்சரிமட்டம், முண்டக்கை பகுதிகள் முற்றிலும் அழிந்து வாழத்தகுதியற்ற பகுதிகளாக மாறியுள்ளது. புஞ்சரிமட்டத்தில் 50 வீடுகளில் 40 வீடுகள் முற்றிலும் சேதமாகின. மீதமிருக்கும் வீடுகளும் வாழத்தகுதியற்ற வீடுகளாக உள்ளன. மீண்டும் அங்கு வீடுகள் கட்ட முடியாத அளவுக்கு நிலைமைகள் அங்கு உள்ளன. இதே நிலை தான் முண்டக்கை பகுதியிலும் நிலவுவதாக கல்பெட்டா எம்எல்ஏ கூறியுள்ளார். முண்டக்கை பகுதியில் 540 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமலையில் அடக்கம்: நிலச்சரிவினால் உயிரிழந்து சொந்தம் கோர ஆள் இல்லாத சடலங்களை புதுமலையில் தகனம் செய்யும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. மொத்தம் 64 சென்ட் இடத்தில் 29 சடலங்கள், 85 உடல்பாகங்களை தகனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர்: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன்,
“வயநாட்டில் நடந்தது தேசிய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க பேரழிவு. ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கிய பேரழிவின் அலைகள் இன்னும் குறையவில்லை. ஒரு ஒட்டுமொத்த கிராமமுமே நிலச்சரிவில் அழிந்தது கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது." என்று தெரிவித்தார்.

வயநாட்டில் ஆய்வு செய்த சுரேஷ் கோபி

அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று ஆய்வு செய்தார். அப்போது பேசியவர், “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சட்ட அம்சங்கள் ஆராயப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு நிலவரத்தை ஆராய்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கும், அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீட்புப் பணிகளில் கூடுதல் படைகள் தேவைப்பட்டால் அதுபற்றி கேரள அரசு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x